Tuesday, 7 August 2018

Kalaignar

கள்ள மௌனத்தை கலைத்த மௌனம்

தலைவருக்குச் சீக்கிரம்

வயதாகிவிட்டது.

தேவையே இருப்பை

முடிவுசெய்கிறது.

அவர் இன்னும்

தேவைப்படுகிறார்.

ஆனால், அவர் தேவைப்பட்டுக்கொண்டே

இருப்பார் என்பதால்

அவரை சீக்கிரம்

வயதாக்கிவிட்டது காலம்.

தலைவரிடம்

இளைமைக்கான கூறுகள்

எப்போதுமிருந்தன.

தலைவர்

வினாடிகளோடு யுத்தம் நடத்தியவர்.

நிமிடங்களை செரித்து வாழ்ந்தவர்.

மணிக்கணக்குகளை வாழ்வுக்கு

பந்தியிட்டவர்.

அவர் நுகர்ந்த வாழ்வெனும்

இலையின் எச்சிலில்

காலம் இன்னமும் சுவையோடிருக்கிறது.

நினைவுகளாய்

சாதனைகளாய்

அரசாய்

அமைப்பாய்

சொல்லாய்

எழுத்தாய்

இன்னுமாக இன்னுமாக

பல்விருகமாய்

வியாப்பித்திருக்கிறது

அச்சுவை.

மாறாத மனமும்

கலப்பும்

உயிர்ப்பும் கொண்ட அச்சுவை

காலதிகாலத்தின் பூரணத்தில்

தலைமுறைகளின்

நா ஏறும்

பசிநீக்கி.

தலைவர்

உழைத்துக்கொண்டேயிருந்தார்.

அந்த உழைப்புக்கு

எடைக்கு எடை

கொடுப்பதெல்லாம்

அவமானம்.

தலைவர் இயங்கிக்கொண்டே

இருந்தார்.

அந்த இயக்கத்தின் நீட்சிக்கு

கிடைத்ததெல்லாம்

பழிச்சொல்.

தலைவர் வாழ்ந்துகொண்டேயிருந்தார்.

வாழ்வின் கணம்தோறும்

அவர் கண்டதும்

பெற்றதும்

இன்பத்துக்குள்

கிடக்கும் வலியும்,

வலிகளை வெல்லும் இன்பமும்.

தலைவர் மீண்டுகொண்டேயிருந்தார்.

அவரது உயிர்த்தெழும்

நாட்களிலெல்லாம்

மீண்டும் மீண்டும்

அறையப்பட்டவை

துரோகச் சிலுவைகள்.

அவரது முதுகில்

இருக்கும் துரோகத்தின்

காயங்களில் சில லட்சம் மனிதர்களின்

ரேகைகள் இருக்கின்றன.

தலைவர்

உழைத்துக்கொண்டே

இயங்கிக்கொண்டே

வாழ்ந்துகொண்டே

மீண்டுகொண்டே

இருந்தார்.

அப்போதெல்லாம்

மலர்ச்செண்டுகளுக்கு நடுவே மலம் வீசலும்

புகழ்மாலைகளுக்கு நடுவே இழிவுரைகளும்

வாழ்த்துப்பாக்களுக்கு நடுவே

வசைமொழிகளும்

மிகக் கவனமாய் சேர்த்துக் கொடுக்கப்பட்டன

அவர் இயங்கிய போதெல்லாம்

கட்டாய ஓய்வை மட்டுமே பரிசாக

அளிக்க நினைத்தார்கள்.

ஆனால், இப்போது அவர் காலத்தின் ஓய்விலிருக்கிறார்.

இப்போது அவரிடம் கட்டாய உழைப்பையும், இருப்பையும்

கேட்கிறார்கள்.

அப்போதெல்லாம், அவரது

தோல்விகள் மட்டுமே பேசப்பட்டன.

இப்போது வெற்றிகள் பேசப்படுகின்றன.

இந்நாட்களின்

சுவாசத்தில்

சாம்பல் படர்ந்திருக்கிறது.

எங்கெங்கும் மனிதர்கள்

மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் எப்படி இருக்கிறார்?

என்ற கேள்வி சமீபத்திய அனிச்சையாக

நம்மோடு சேர்ந்திருக்கிறது.

எல்லோருடைய நலம் விசாரிப்பிலும்

ஒரு குற்றவுணர்ச்சி இருக்கிறது.

அவரைப் பற்றித் தெரிந்தும்

பேசாமல் இருந்தவர்கள்

அவரைப் பற்றி தெரியாமலே

பேசிக் கொண்டிருந்தவர்கள்

அவரைப் பற்றித் தெரிந்தும்

அல்லாதவைகளை மட்டுமே

பேசித்திரிந்தவர்கள்

அவரைப் பற்றிய அல்லாப்புகளை

மட்டுமே அவசியம் செய்தவர்கள்

அவரை எல்லாமுமாக

கருதியவர்கள்

அவரை ஏதுமில்லாமல்

செய்யப் போராடியவர்கள்

எல்லோரும்

கைநடுக்கத்துடன்

மருந்துவாசத்தின்

இருக்கக்கூட்டில்

இருக்கும் அவரைப்

பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவரைப்பற்றி

சொல்லப்படும் ஒவ்வொரு

பகிர்தலிலும்

அவருக்கு எதிராக சிந்தித்த

நாட்களின் உறுத்தல் தரும்

குற்றவுணர்வை

உணரமுடிகிறது.

சிலர் ஏதேதோ

சொல்லி,

என்னென்னமோ

புகழ்ந்து

அவருக்குக் கொடுத்த

பழைய வடுக்களை

மறைக்க முயல்கின்றனர்.

இன்றைக்கு

முற்றும் புதிதான

ஒரு சரித்திரம்

பதியப்பட்டுக்

கொண்டிருக்கிறது.

மறைக்கப்பட்டவைகள்

கவனிக்கப்படாதவைகள்

தவிர்த்தவைகள்

உதாசினம் செய்யப்பட்டவைகள்

மதிப்புகுறைக்கப்பட்டவைகள்

என சகலத்தின்

மெய்யால் ஆன

சொற்சரடை சிலர் பின்னிவருகின்றனர்.

அவர் வாழும் நாட்களிலேயே

அவரது புகழைப்பாடித் தீர்த்துவிட வேண்டும் என்கிற அவசரம்

தெரிகிறது.

சொல்லாமல் விட்ட

நிகழ்ந்த கதைகளின்

குடித்தொகை அவருக்காக

அவசரமாக எழுதப்படுகிறது.

அந்த அவசரத்திற்கு

பின்பு இத்தனை நாட்களாக

சொல்லாமல் விட்டுவைத்தவைகளின்

குற்றவுணர்வு கொத்தாகத்

தெரிகிறது.

அவரை நேசித்தவர்கள்

அவரை வெறுத்தவர்கள்

இருவரும்

இந்த குற்றவுணர்வின் மையத்தில்

நிற்கிறார்கள்.

இன்னும் சொல்லியிருக்கலாமோ

என நேசித்தவரும்,

இவ்வளவு நாளாக இப்படிச் சொல்லியிருக்கிறோமே

என வெறுத்தவர்களும்.

எல்லா சதுரங்கத்திலும்

போர்க்காயாக இருந்தவர்.

நீண்ட யுத்தத்திற்கு

பிறகு அமைதியாக

படுத்திருக்கிறார்.

காயம் பட்ட ஸ்தானங்களும்

காயம் கொடுத்தவரின் ஸ்தானங்களும்

அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றன.

இந்த நாட்களின் வெறுமை

அவர் மீதான

வெறுப்பை அர்த்தமிழக்கச் செய்திருக்கிறது.

பாலுக்கு அழுத

குழந்தையைக்

கடிந்துகொண்ட

அம்மாவின் இயலாமையை

எல்லோருடைய மனதும்

சுமக்கிறது.

வெறுப்புக்கும்

அவெறுப்புக்கும்

இடையே அவர் நடத்திய

யுத்தத்தின்

வாகையாக

இன்றைக்கு எல்லோருடைய கழுத்தையும்

குற்றவுணர்வு சூழ்ந்திருக்கிறது.

எப்பொழுதும்

மன்னித்தவர்.

இப்பொழுதும்

மன்னிக்கவேண்டும்.

மீளமுடியாத துயரில்

தாங்கள் மாட்டிக்கொள்ள

இருப்பதாக

அச்சமுற்றிருக்கிறார்கள்,

அவருக்கு முன்னொருநாளில்

துரோகப்பட்டம் கொடுத்தவர்கள்.

அவ்வச்சம்

அவர்களை இன்னும்

குற்றவுணர்வுரச்செய்கிறது.

குற்றவுணர்வின்

அச்சமூட்டலிலிருந்து

எழும் வார்த்தைகள்

அவரை மீச்சொல்லில்

புகழக்கேட்கிறது.

இகழ்ந்தவர்கள்

இப்போது புகழ்கிறார்கள்.

அப்புகழ் கூட சிலருக்கு

அச்சம் தருகிறது.

அதனால், அவர்கள்

புகழையும், புகழ்பவரையும்

இன்றைக்கும் இகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அவரது வாழ்விலும் வீழ்விலும்

புகழிலும் இகழிலும்

போற்றலிலும் தூற்றலிலும்

முற்றாய் அவர் இன்னும்

பலரது வாழ்வையும்,

எதிர்காலத்தையும்

தீர்மானிப்பவராக இருக்கிறார்.

இகழும் பிள்ளைக்கும்

தந்தையாக இருக்கவேண்டிய

நிர்பந்தத்தின் ரணம் அறிந்தவர்.

எல்லா கன்றுகளுக்கும்

காம்பின்

இருப்பையும்

சமபங்கையும்

உறுதிசெய்ய வேண்டிய

திண்டாட்டம் அறிந்த

தாய்ப்பசு.

அரும்பாத கொம்பினால்

மடி முட்டும்

கன்று தரும்

வலிகளை ஜீரணிக்கும்

ஆற்றல் அம்மடிக்கு இருந்தது

ரத்தம்கசியும்

நாள்வரை தன்னால்

இயன்ற பாலைக்கொடுத்துவிட்டே

இன்று மருந்துதொழுவத்தில்

சயனமுற்றிருக்கிறது

பசு.

அவரது சுயநலத்தில்

பொதுநலம் கலந்திருந்தது.

எங்கள் பொதுநலம்

முழுக்க எப்போதும்

சுயநலமானது.

இந்த ஓய்வு,

அவரைவிட நமக்கு அதிகம்

பயன்பட்டிருக்கிறது.

முதன்முறையாய்

வாசிக்க

தெரிந்துகொள்ள

தேட

அறிய

கற்க

மருந்து சாம்ராஜ்ஜிய்த்தின்

மேல் படுத்திருக்கும்

கோ கவியின்

மௌன மொழி

நம்மை பழக்கியிருக்கிறது.

இம்மொழியின் அர்த்தத்தை

வாழ்வுசெய்வதுதான்

நமக்கான அஞ்சலி.

தேதிகுறித்து

நடந்த எல்லா போரிலும்

முன்னின்றவர்.

அறிவிப்பில்லாது நடக்கும்

இன்றைய போரில்

மிக அதிகமாக தேவைப்படுகிறார்.

படைநடத்த ஆளில்லாத

நாட்களிலேயே

ஓய்வுக்குச்சென்ற

சேனைக்கிழவனின்

உத்தமம் விளங்குகிறது.

இது ஒரு

இறுதிப்போர்.

அநீதி செய்ய

உரிமை உள்ள போர்.

எல்லோருக்கும்.

அவருக்கும்.

அவர்தான்

முன்னின்று நடத்தவேண்டும்.

இம்முறை நாங்கள்

அவருக்கு பின்னால்

நிற்போம்.

இல்லையெனில்

குற்றவுணர்ச்சி எங்களைக் கொன்றுவிடும்.

- விவேக் கணநாதன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை