Sunday, 22 April 2018

World books day

காலை 7, திங்கள், 23 ஏப் 2018

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி!

ந.ஆசிபா பாத்திமா பாவா

உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட்டிய சிறப்புக் கட்டுரை

நான் கதைகளைப் பற்றி உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். அவை வெறும் பொழுதைப் போக்குபவை அல்ல. அவை மன, உடல் நோய்களையும் மரணத்தையும் எதிர்கொண்டு விரட்டியடிப்பவை. உங்களிடம் கதைகள் இல்லையென்றால், உங்களிடம் எதுவுமே இல்லையென்று அர்த்தம்.

- லெஸ்ஸி மார்மோன் சில்கோ

எங்கோ எப்போதோ வாசித்த இச்சொற்கள் மண்ணில் வேர் பிடிப்பதைப் போல, மனதில் ஆழப் பதிந்துவிட்டன. நம் நாட்டில் வாசிப்புக்கு, குறிப்பாகக் கதைகளாய் வாசிப்பதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டும். காரணம் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, கதைகளை, நாவலை வாசிப்பது என்றால் ‘அது வேலை வெட்டி இல்லாதவன் பொழுதுபோக்கச் செய்வது’ என்றே கூறுவர். என் சித்தியும் அப்படித்தான் சொல்வார். “கதை வாசிச்சு என்ன பண்ண போற?” என்பதுதான் அவரின் முதல் கேள்வி. இதுபோல பலர் என்னிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்; வார்த்தைகள் வெவ்வேறானாலும் கேள்வியின் சாராம்சம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களுக்கும் அறிவியல் சார்ந்த புத்தகங்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதையோ, அங்கீகாரமோ பெரும்பான்மையான வீடுகளில், பள்ளிகளில் கதைப் புத்தகங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், புத்தகங்களைப் பற்றிய போதிய தெளிவு நம்மிடையே இல்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், “புத்தகங்கள் வாசியுங்கள், அது உங்களை உயர்த்தும்” என்ற பொதுவான அறிவுரையே வழங்கப்படுகிறதே அன்றி, என்ன புத்தகங்கள் வாசிக்கலாம், அதை எப்படி வாசிப்பது என்ற வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படுவதேயில்லை.

இதன் விளைவாக, நாம் கிடைத்த புத்தகங்களையெல்லாம் படிக்கிறோம். “கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்” என்று பழமொழி கூறுகிறோம். ஆனால், அதன் உண்மையான அர்த்தம், “ஒரு விஷயத்தைக் கண்டு படிப்பவன், பண்டிதன் ஆவான்” அதாவது, எந்தவொரு செயலையோ, கலையையோ கண்டு படிப்பவன் பண்டிதன் ஆவான். ஆனால், நாம் அதைத் திரித்துப் புரிந்துகொண்டு, அதை நடைமுறையும்படுத்துகிறோம்.

எப்போதுமே நாம் வாசிக்கும் விஷயங்கள், நம்மை ஆழமாகப் பாதிக்கக்கூடியவை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு குறுங்கவிதையோ, கதையோ, நாவலோ... நாம் வாசித்தால், நம்மிடம் ஒரு தாக்கத்தை அந்தப் படைப்பு நிச்சயமாக ஏற்படுத்தும். அதை நாம் உணர்கிறோமா, இல்லையா என்பது நம்மைச் சார்ந்த விஷயம். நேரத்தைக் கழிக்கும் ஒரே நோக்கோடு வாசிக்கப்படுபவை நமக்கு நல்லவை அல்ல. காரணம், நாம் வாசிக்கும்போது அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் நம் ஆழ்மனதில் பதியக்கூடியவை. காலத்தின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் அவை நமக்குக் கை கொடுக்கும்.

இப்படியான ஒரு புத்தகத்தை நான் வாசிக்க நேர்ந்தது. கல்லூரி படிக்கும் நாள்களில் ரவீந்தர் சிங் என்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரின் தீவிர வாசகியாக நான் இருந்தேன். அவரது முதல் மூன்று புத்தகங்கள் மிகவும் அழகான உணர்வுகள் நிரம்பியவை. நான்காவது புத்தகம் சுமார். அதற்கடுத்து வந்த “This love that feels right” என்ற புத்தகத்தை வாசித்த பிறகுதான், ஒரு எழுத்தாளரை நம்மால் வெறுக்கவும் முடியும் என்று கற்றுக்கொண்டேன். இப்படியாகப் பல அனுபவங்கள் இருக்கின்றன.

சிறு வயதிலிருந்தே நான் தீவிரமாகப் புத்தகம் வாசிப்பவள். நான் பள்ளி சென்று வாசிக்க ஆரம்பித்ததும் எனக்கு அம்மா அப்பா வாங்கிக் கொடுத்த முதல் பிறந்த நாள் பரிசு ஒரு புத்தகம்தான். Enid Blyton புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து வாசித்த நாள்களும் க்ரைம் நாவல்களில் மூழ்கிக் கிடந்ததும் பசுமையாக நினைவிருக்கிறது. நான் சிறு வயதில் அநேகமாக வாசித்தது க்ரைம், த்ரில்லர் நாவல்கள்தான். இவற்றைத் தாண்டி, நான் வாசித்த முதல் நாவல், Frances Hodgson Burnett எழுதிய The Secret Garden என்ற நாவல்தான். மிக மிக அழகான குழந்தைகளின் கதை என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து பல புத்தகங்கள் வாசித்தேன். கதைப் புத்தகங்கள். என்னிடம் கேட்கப்பட்ட, கேட்கப்படும் கேள்வி, “இப்படிக் கதை கதையா வாசிச்சு என்னாச்சு? என்ன படிச்ச?”

இந்தக் கேள்விக்கான சுருக்கமான பதில்:

மென் உணர்வுகளும் பக்குவமும்

கதைகளும் நாவல்களும் இலக்கியமும் நம்மை sensitive ஆக மாற்றிவிடும். தொடர்ந்து வாசிப்பவர்களால் இதை நிச்சயமாக உணர முடியும். மென் உணர்வுகளையும் மிகச் சிறிய மாற்றங்களையும் நாம் எளிதில் புரிந்துகொள்வோம். ஒரு புத்தகம் வாசித்தவுடன் இது நடப்பதற்குச் சாத்தியங்கள் குறைவுதான். ஆனால், தொடர் வாசிப்பும் பக்குவமும் நம்மை இதை உணரச் செய்யும்.

அடுத்ததாக, அனைவரும் சொல்வதைப் போல கட்டுரைகள், செய்திகளை நேரடியாக வாசித்து உள்வாங்கிக்கொள்வது கடினம். பெண்ணியம் சார்ந்த ஒரு கட்டுரையை, சுயசரிதையை வாசித்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் சொல்லாமல் போன விஷயங்களையும் புரிந்து மனத்தினுள் கொண்டுசெல்ல ஒரு பக்குவம் தேவை. அந்தப் பக்குவமான மனதை, தொடர்ந்து கதை வாசிக்கும் பழக்கம்தான் நமக்கு வழங்குகிறது.

அறிவு மட்டுமல்ல

வாசிப்பு என்பது அறிவை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமேயல்ல. மனதை ஆற்றுப்படுத்துவதற்கான மருந்தும்கூட. வெறும் அறிவைச் சார்ந்து மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில், மனதைப் பற்றி அதில் நிகழும் பெரும் மாற்றங்கள் பற்றி புரிய வைப்பது கடினம். வாழ்தலுக்கான அடிப்படை அர்த்தம் வாழ்தல் மட்டும்தான். வாழ்தலை இன்னும் அழகாக்க வல்லவை கதைகள்.

நான் வாசித்ததில், என்னைப் பெரிதும் பாதித்த, என்னுள் ஒரு பிறழ்ச்சியை ஏற்படுத்திய கதைகள் என்று நான் கருதுபவை:

1. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

2. ஹாரி பாட்டர் முழு தொகுப்பு- J.K. Rowling

3. இடைவெளி - எஸ்.சம்பத்

4. The Monk Who Sold his Ferrari- Robin Sharma

5. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

6. யானை டாக்டர் - ஜெயமோகன்

7. Eleven Minutes- Paulo Coelho

(இந்தப் பட்டியலே ஒரு கட்டுரையாகிவிடும் என்ற காரணத்தினால், இதோடு நிறுத்துகிறேன்!)

“என் வாழ்நாளில்” என்று சொல்லுமளவுக்கு நான் பெரிதாக வாழ்ந்துவிடவில்லைதான். ஆனால் இத்தனை ஆண்டுகள் என்னை உருவாக்கியதில், ஆற்றுப்படுத்தியதில் பெரும்பங்கு புத்தகங்களுக்கே. வீட்டுக்குள்ளேயே வாழ வேண்டிய சூழல் இருந்தபோதும், சிறிதளவும் என்னைத் துன்பத்தில், எண்ணச் சுழற்சியில் சிக்கவிடாமல் காப்பாற்றியவை புத்தகங்கள். இன்று நான் உலகை இப்படிக் காண்கிறேன் என்றால், அதற்கும் புத்தகங்கள்தான் காரணம்.

நமக்கு உதவி செய்த ஒருவருக்கு, மிகவும் நெருக்கடியான சூழலில் நமக்கு ஆதரவளித்தவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறுவோம்? எவ்வளவு கொண்டாடுவோம்? நான் மனம் உடைந்திருக்கும்போதெல்லாம் தஞ்சம் புகுந்தது புத்தகத்தில்தான்; வாழ்வின் புரியாத புதிர்களை எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு வழங்கியது புத்தகங்கள்தான்; என்னை நானாக உருவாக்கியது புத்தகங்கள்தான்.

வாழ்நாள் முழுமைக்கும் புத்தகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். புத்தகங்கள் கொண்டாட்டத்திற்குரியவை. ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். இன்று கூடுதலாகக் கொண்டாட வேண்டும்.

ஏனென்றால், இன்று உலகப் புத்தகத் தினம்!

இனிய புத்தகத் தின வாழ்த்துகள் சகாக்களே…

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை