சிறப்புக் கட்டுரை: ஒரு படத்துக்கு ஆயிரம் கண்கள்!
-சிவா
கூவம் நதிக்கரை சென்னையைக் கிழித்துச் சென்றுகொண்டிருந்த கிரீம்ஸ் சாலையில், சத்தமின்றி ஒரு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த இடத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, அங்கு இடம்பெற்றிருந்ததில் எதுவும் தனித்துவம் பெற்றவை அல்ல. இந்த உலகிலுள்ள எந்த மனிதர் நினைத்தாலும் அணுகக்கூடிய, பிடித்துவைத்துக் கொள்ளக்கூடியவை மட்டும்தான் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், மற்றவர்களில் பலர் பிரயத்தனப்படாத ஒன்றை அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்களில் பிடித்துவைத்திருந்த போட்டோகிராபர்கள் செய்திருந்தனர். போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ்அமைப்பைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டோகிராபர்கள் எடுத்திருந்த படங்கள், கிரீம்ஸ் சாலையிலுள்ள லலித் கலா அகாடமியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
திரும்பிப் பார்க்கும் எல்லா இடங்களிலும் மனதைப் பறிக்கும் படங்கள் இடம்பெற்றிருந்த கண்காட்சி அரங்கில் எந்தப் பக்கத்திலிருந்து தொடங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது, போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் அமைப்பின் செயலாளர் ஜி.வி.சுப்ரமணியன் வழிகாட்டித் தொடங்கிவைத்தார்.
தொடக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்த படங்களில் இரண்டு கவனத்தை ஈர்த்ததும் அதன் அருகில் சென்று பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த இடங்கள் ஏதோ ஒரு நெருக்கத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தன. அப்போது அங்கு வந்த அந்த போட்டோவின் சொந்தக்காரர் அருண் அவற்றை விளக்கத் தொடங்கினார்.
படத்தின் ஆன்மா எனக்கு மிகவும் முக்கியம்
“பொதுவாகவே எனக்கு இயற்கையின் மீது அதிக ஈடுபாடு. அதற்காக காட்டுக்குச் சென்று தான் இயற்கையைத் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சென்னையின் நன்மங்கலம் சதுப்பு நிலப் பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை. இரண்டாவது படத்திலிருக்கும் நாரை, அந்த மீனைப் பிடித்த பல நிமிடங்கள் கழித்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். படத்தின் தன்மையைவிடவும், அதன் ஆன்மா எனக்கு மிகவும் முக்கியம். வேட்டையாடப்பட்ட மீனை உடனே எடுத்துத் தின்றுவிடுவதில்லை இப்பறவைகள். மீனைத் தலைகீழாகத் தின்றால் அவற்றின் செதில்களில் உள்ள முள் பறவையின் கழுத்தைக் கீறிவிடும். எனவே, லாகவமாக அவற்றைத் திருப்பிப் பிடித்த பிறகே பறவைகள் உண்ணத் தொடங்குகின்றன.
அப்படிப் பலவிதமாகத் திரும்பிக்கொண்டிருந்த பறவை, ஒரு சமயத்தில் மீனின் செதில்களைச் சரியாகப் பிடித்து அதன் கண்ணோடு நேராகப் பார்க்கும் நிலைக்கு வந்தபோது, இதுதான் சரியான தருணமெனப் படமாக்கினேன். அதுபோலவே மேலே இருக்கும் படத்திலும், ஒரு நண்டைப் பிடித்துவந்து மரக்கிளையில் உட்கார்ந்திருந்த மீன்கொத்திப் பறவையும் அந்த நண்டைத் தூக்கிப் போட்டு வாகாகப் பிடிக்கும்வரை காத்திருந்தேன். அப்போது அந்தப் பறவையின் கண்களும், நண்டின் கண்களும் ஒரே நேர்கோட்டில் வரும் வரையிலும் காத்திருக்க வேண்டியதிருந்தது. வேட்டைக்காரனுக்கும், வேட்டையாடப்படும் உயிருக்குமான உறவை இந்தப் படங்கள் பிரதிபலிப்பதாக நம்புகிறேன்” என்று அருணின் விளக்கம் முடிந்தது.
தாயாக மாறும் சகோதரி
ஒரு படத்தைப் பார்க்கும் ஆயிரம் பேருக்கும் ஆயிரம் கதைகளைச் சொல்லும் தன்மை சில படங்களுக்கே உரித்தாகும் சிறப்பம்சம். அப்படியோர் உணர்வைக் கொடுத்த மற்றொரு படம், ரமணகுமார் எடுத்திருந்த Sister As Mother புகைப்படமாகும். குழந்தையைக் கைகளில் தாங்கிக்கொண்டு அந்தச் சிறுமி பார்க்கும் பார்வைக்கு எத்தனை விளக்கங்களைக் கொடுத்தாலும் தகும். யார் அந்தப் பெண், யார் அந்தக் குழந்தை என்ற கேள்விக்கு, அகதிகளா, பெற்றோரால் கைவிடப்பட்டவர்களா, தொலைந்துபோனவர்களா என்று எத்தனையோ பதைபதைக்கும் கேள்விகள் உருவாகின்றனவே தவிர, எதுவும் பதிலைக் கொடுக்கவில்லை. எனவே, இந்தப் படத்தை எடுத்த ரமணகுமாரிடம் இப்படம் குறித்து விசாரித்தபோது தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்கு பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள பழங்குடி கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட படம் இது. நம் உலகத்தில் புழங்கும் எவ்விதப் பொருளையும் அறியாமல் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு அவர்களுக்கு அமைந்திருக்கிறது. கேமரா, மொபைல் எனஎதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் வேலையில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். நம்மைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு காட்சிப் பொருள் போலத்தான் தெரிகிறது. அப்படித்தான் அந்த சிறுமியும் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பலரும் அவரை நேராகவே படம்பிடித்துக்கொண்டிருக்க, நான் அருகே சென்று மேலிருந்து கீழாக அரவணைப்பைத் தேடி ஒடுங்கிக் கிடந்த அந்தக் குழந்தையையும் சேர்த்துப் படமாக்கினேன். நான் எடுத்த படங்களில் இது எப்போதும் முக்கியமான ஒன்றாக இருக்கும். ரஷ்யாவில் நடைபெற்ற புகைப்படக் காட்சியில் கிடைத்த விருது இந்தப் படத்துக்கான முதல் அங்கீகாரம்” என்று ரமணகுமார் கூறியபோது அந்தப் பழங்குடிகளின் வாழ்வை நினைத்து பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.
அழகு என்பது பார்க்கும் பார்வையில் இருக்கிறதே தவிர, அது யாருக்கும் பாத்தியதை எழுதிக் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. கறுப்பு அழகல்ல, பிற வண்ணங்களே அழகு எனும் கருத்துகளையெல்லாம் இந்தப் படம் அடித்து உடைத்திருக்கிறது. காரணம், பல வண்ணங்களில் எடுக்கப்பட்டிருந்த இப்படம், கவனங்களைச் சிதறவிடாமல் அந்தச் சிறுமியின் மீது முழு கவனத்தையும் குவிப்பதற்காகக் கறுப்பு வெள்ளையில் மாற்றப்பட்டிருக்கிறது. தேவைப்படும் இடங்களில் மட்டுமே வண்ணங்கள் அதன் இருப்பைப் பூர்த்தி செய்யும். மற்ற சமயங்களில் அவை வண்ணத்துப்பூச்சியின் கீழ் சிறகில் ஒளிந்திருக்கும் வண்ணத்துக்குச் சமமானவை.
வண்ணத்துப்பூச்சியின் அழகு எது?
ஒரு வண்ணத்துப்பூச்சியின் அழகு, அது பறக்கும்போது தெரியும் மேல் சிறகில் இருப்பதை விடவும், ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்போது இரண்டு சிறகுகளும் சேர்ந்த நிலையில் தெரியும்போதுதான் முழுமையடைகிறது என்கிறார் ஹேமா. அதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தை அவர் எடுத்திருந்தார். தனித்தனிச் சிறகுகளாக இருந்தாலும், அவை எப்படித் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள ஒரே அமைப்பாக இயற்கையால் வரையப்பட்டிருக்கின்றன என்பதை ஹேமாவின் படங்கள் பேசுகின்றன. அவற்றைப் பற்றி அவரும் பேசினார்.
“ஒவ்வொரு பட்டாம்பூச்சிக்கும் ஒவ்வொரு விதமான வண்ண அமைப்பு இருக்கிறது. அவ்வமைப்பைக் கொண்டே பட்டாம்பூச்சிகள் வகை பிரிக்கப்படுகின்றன. தமிழகத்துக்குள்ளாகவே ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. ஒரு பட்டாம்பூச்சியைப் படம் எடுத்ததும் வேலை முடிந்துவிடுவதில்லை. அதன் வண்ண அமைப்பைக் கொண்டு அது எந்தப் பிரிவின் கீழ் வருகிறது. எந்த இனத்தைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கும் ஆர்வம்தான் இந்த புகைப்படக் கலையிலிருக்கும் மிகப் பெரிய சவால். வரலாற்றின் ஏதோ ஓர் ஓரத்தில் இந்தக் காலத்தில், இந்தப் பட்டாம்பூச்சி இனம் இங்கு வாழ்ந்திருக்கிறது என்று பதிவு செய்யும் வேலையை நான் செய்துகொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது” என்று சொல்லும்போது ஹேமாவின் முகத்திலிருக்கும் பெருமிதம், தன் தொழிலை எந்தளவுக்கு நேசித்துச் செய்கிறார் என்பதை உணர்த்தத் தவறவில்லை.
சாதாரண மக்கள் பார்க்க ஆர்வம் காட்டாத, பார்க்க முடியாதவற்றை படம் பிடிப்பது மட்டும் போட்டோகிராபர்களின் வேலையா என்றால், இல்லை என்பதே பதில். மக்கள் பார்க்கத் தவறவிடுவதை படம்பிடித்து அவர்களிடம் கொண்டுசேர்ப்பது போட்டோகிராபர்கள் செய்யும் மிக முக்கிய வேலை எனலாம். இதற்கு உதாரணமாக இரண்டு படங்களைச் சொல்லலாம். ஒன்று, மோகனகிருஷ்ணன் எடுத்திருந்த சாலையோரப் புகைப்படம். மற்றொன்று, விவேக் ஆனந்த் எடுத்திருந்த கடலோர சூப்பர் மூன் புகைப்படம்.
மோகனகிருஷ்ணனின் படம் அதிவேகமாகத் தொழில்நுட்பத்தின் பின் சென்றுகொண்டிருக்கும் உலகம், மானுடத்தை எந்தளவுக்கு இழந்து வருகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. செயற்கைக்கோள் தயாரிக்க ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கும் அரசாங்கம், தன் நாட்டின் ஏழ்மையைச் சரிசெய்ய எத்தனை முயற்சிகளை எடுத்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்திய நாட்டில் ஜப்பானியத் தொழில்நுட்ப வளர்ச்சியை விளம்பரப்படுத்தக் கொடுக்கப்பட்ட இடம்கூடத் தன் நாட்டின் குடிமகனுக்குப் புகலிடமாகத் தர முடியாத நிலைதான் இங்கு இருக்கிறது.
விவேக் ஆனந்த் எடுத்திருக்கும் சூப்பர் மூன் படம், சமீபத்தில் அந்த அரிய சம்பவம் நிகழ்ந்தபோது பலராலும் படமாக்கப்பட்டது. ஆனால், அனைவரும் நிலவின் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்க, அதையும் கவனிக்காமல் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கும் ஐஸ் விற்பவர், செல்ஃபி எடுத்துகொண்டிருக்கும் ஒரு காதல் ஜோடி ஆகியோரை விவேக்கின் கேமரா படம்பிடித்திருக்கிறது. இது ஆழமாகப் பார்க்கும்போது கிடைக்கும் மனப் பதிவு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், கடலோரத்தில் நிலவின் ஒளியில் ஓய்வெடுக்கும் ஐஸ் விற்பவரையும், மெழுகுவத்தியை ஏந்தி நிற்கும் காதல் ஜோடியையுமே இந்தப் படம் நமக்குக் காண்பிக்கிறது.
விளக்க இயலாத அனுபவம்
கேமரா வழி பார்க்கும்போது, அதில் விரியும் உலகத்தின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. ஆனால், அதன் வழி ஒரு படத்தை உருவாக்க எத்தனை எத்தனை பிரயத்தனங்களை புகைப்படக் கலைஞர்கள் எடுக்கிறார்கள் என்பதை இதுபோன்ற காட்சிகளில் அவர்களிடமிருந்தே கேட்டறியும்போது ஏற்படும் உணர்வை விளக்க எந்தக் கற்பனையும் போதாது.
ரமேஷ் எஸ்.ஏ. எடுத்திருந்த படம் அப்படிப்பட்ட ஒன்று. கோயிலின் ஆள் அரவமற்ற பகுதியில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்த ஒளிக்கீற்றின் இடையே ஒரு பெண்ணை நிறுத்தி எடுப்பதற்கும் மேல் ஒரு படத்துக்கு அழகு சேர்க்க முடியுமா? ஆனால், அந்தப் பெண் திட்டமிட்டு நிறுத்தப்பட்டவர் அல்ல. கோயிலைச் சுற்றிவந்துகொண்டிருந்தவர், சரியாக அந்த ஒளிக்கீற்றுக்குள் புகுந்து கடக்கும்போது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நொடி தாமதித்திருந்தாலும், அவசரப்பட்டிருந்தாலும் இந்தப் படம் கிடைத்திருக்காது. அந்தப் பொறுமையும், தொலைநோக்குப் பார்வையுமே ஒரு போட்டோகிராபரைக் கலைஞனாக ஆக்குகிறது.
ஒரு போட்டோகிராபர் கலைஞரா, கவிஞரா என்ற சந்தேகம் பல காலமாக என்னுள் ஏற்பட்டிருந்தது. அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததற்கு, இந்த புகைப்படக் காட்சிக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராதிகா ராமசாமிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். கவிஞராக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும் தனது படைப்புக்கு உருவம் கொடுக்கும்போதுதான் ஒருவர் வெளியே அறியப்படுகிறார். எண்ண அலைகளாக மட்டுமே ஒரு படைப்பு இருக்கும்போது அதன் ஆயுள் படைப்பாளியுடன் முடிந்துவிடுகிறது. அதற்கு உருவம் கொடுத்து, பலருடன் அதன் ஆன்மா பகிரப்படும்போது அது காலம் தாண்டி போற்றப்படும் ஒன்றாக மாறுகிறது.
“நல்ல நல்ல படங்கள் இத்தனையையும் தங்களது லேப்டாப்பிலும், மொபைலிலும் வைத்துக்கொண்டிருந்தவரை இவர்களுக்குக் கிடைத்த இன்பத்தைவிட, இன்று அவற்றை பிரின்ட் போட்டு சுவரில் மாட்டிப் பார்க்கும்போது கிடைக்கும் இன்பம் பல மடங்கு பெரியது. நான் புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் பலருக்கும் சொல்லும் அறிவுரை ஒன்றுதான். எடுக்கும் படங்களில் சிறப்பானதாக நீங்கள் நினைப்பதை பிரின்ட் போட்டு பாருங்கள். அது உங்களுக்குக் கொடுக்கும் இன்பத்தை விடவும், பல மடங்கு ஆர்வத்தை அதைப் பார்ப்பவர்களுக்குக் கொடுக்கும்” என்று பகிர்ந்துகொள்வதன் அருமையை அழகாக விளக்கினார் ராதிகா ராமசாமி.
“நம் நாட்டில் மட்டும்தான் அதைச் செய்வதில்லை. பொழுதுபோக்கு, ஆர்வம், தொழில் என்பதைத் தாண்டி புகைப்படக் கலையை வணிகமாக மாற்ற வேண்டிய தேவையும் இப்போது அதிகம் இருக்கிறது. எல்லா போட்டோகிராபர்களாலும் பணமில்லாமல் படமெடுத்து மகிழ்ந்திருக்க முடியாது. அப்படித் தேவை இருக்கும் பலருக்கு இதை வணிகமாக மாற்றாமல் விடுவது பின்னடைவைக் கொடுக்கும்” என்றார் ராதிகா.
கலை, காலத்துக்கேற்பத் தன்னை தகவமைத்துக்கொண்டே வளர்ந்து வந்திருக்கிறது. சில சமயம் அது பொழுதுபோக்கு. சில சமயம் அது ஆன்மிகத் தேடல். சுதந்திரப் போராட்ட காலத்தில் போராட்ட வடிவம். தற்போதைய காலத்தில் பணம்தான் அத்தனையையும் தீர்மானிக்கிறது. எனவே, தன்னை பணமாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் கலைக்கு ஏற்பட்டிருக்கிறது. அது அதன் வழியே தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் அதிகரித்திருக்கிறது. போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் இலவசமாக ஏற்பாடு செய்திருந்த காட்சியில் இருந்த கூட்டத்தைவிடவும், அந்தப் படங்களை ஏலம் விடும்போது அதிக மக்கள் அவற்றை விலைக்கு வாங்க வருவார்கள் என நம்பலாம்.
No comments:
Post a Comment