"எனது வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் விஷயம் என எப்போதும் எனக்கு ஒன்று உண்டு. இன்று இந்த பிறந்தநாளில்கூட அதைச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். எவரை நான் நல்ல வாசகர் என்று கருதுவேன் என்றால், அவர் எழுதியது இது போதும். இதற்குமேலே நான் எழுதிக்கொள்கிறேன் என்று எந்த ரசிகன் என்னை பார்த்து சொல்கிறானோ அவனைத்தான் நான் முழுமையான ரசிகனாக, வாசகனாகக் கருதுவேன். ஏனென்றால் நான் அறிவு கொளுத்துகிறவன் என்றால் எரிகிறவன் வாசகன். ஆகவே அந்த வாசகனைத்தான் நான் அதிகம் கவனத்தில் கொள்கிறேன், மதிக்கிறேன்.
ஒரு கதை நல்ல கதை என்று சீராட்டப்படுகிறது என்றால் முதலில் நான் நன்றி செலுத்துவது வாசகனுக்குத்தான். ஏனென்றால் அந்தக் கதையை கரம் பற்றி கைகளில் வாங்கிக்கொண்டு, அவர்கள் இட்டுச் சீராட்டி அதை வளர்த்தெடுக்கிறார்கள் என்றே கருதுகிறேன். என்னால் நூறு சதவீதம் ஒரு கதையை எழுத முடியாது. அப்படி எழுதக் கூடாது என்கிறது இந்த உலகம். ஒரு கதையை நாற்பது சதவிகிதம்தான் நான் சொல்கிறேன். மீதியுள்ள 60 சதவிகித்தை என் ரசிகன், ஆணோ பெண்ணோ அவர்கள் எழுதிக் கொள்கிறார்கள். அவர்கள் எழுதிக்கொள்ள அவர்களை எழுத்தாளர் ஆக்குவதுதான் என் எழுத்தின் கடமை. அவர்கள் எழுதித்தான் தீர வேண்டுமென்று, பேப்பரிலோ பேனாவிலோ அல்லது மற்ற கருவிகளிலோ கிறுக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. ஆனால் அவர்கள் மனசுக்குள் எழுதிக்கொள்கிறார்கள்.
நான் எழுதிய கதையை அவர்கள் மனதிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து அவர்கள் கற்பித்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் ஒரு ஆத்மார்த்த உறவு என்று சொல்லிக்கொள்வார்கள். ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு வாசகனுக்கும் ஏற்படுகிற உறவு. ஒரு தந்தைக்கும் மகனுக்கும், ஒரு தாய்க்கும் குழந்தைகளுக்கும் இருக்கிற ஒரு மேன்மையான உறவு என்று நான் கருதுகிறேன். என்னை, கீழ்மை அடையும்படியான கதையை எழுத இதுவரை எந்த ரசிகரும் சொன்னதில்லை. அல்லது இப்படி எழுதியிருக்கலாமே என்று எந்த ரசிகரும் சொன்னதில்லை. நான் எதை எழுதியிருக்கிறேனோ அதை சரியாக எழுதியிருக்கிறேன் என உணர்கிறார்கள். அதன் வழி நான் ஊசி போல முன்னால் செல்கிறேன்; நூலைப் போல அவர்கள் பின்னால் வருகிறார்கள். ஆனால் நூலால்தான் ஒரு உலகம் கட்டப்படுகிறதே தவிர ஊசியால் அல்ல என்பதை நான் நன்றாகவே அறிகிறேன்”
No comments:
Post a Comment