Tuesday, 11 September 2018

பிரிவு

தொடர்ந்து போன் அடிக்கிறது. தொடர்ந்து அடிக்கிறது என்றால் யாரும் எடுக்கவில்லை என்றுதானே அர்த்தம். மூத்த மகன் சோஃபாவில் படுத்திருக்கிறான். இளையவன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வயது வந்தவர்கள். அது துபாயிலிருக்கும் தந்தையின் அழைப்பென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் எடுக்கவில்லை. வயதான அம்மா நளினி சமையல் அறையிலிருந்து வருகிறார். ”அப்பாவாதான் இருக்கும், நான் தூங்கிட்டேன்னு சொல்லிடு, இல்லைனா பேசிட்டே இருப்பாரு! இங்கே நடந்த எல்லா சின்னச் சின்ன விஷயங்கள் குறித்தும் கேட்பார்” என்கிறான் மூத்தவன். ”நானும் தூங்கிட்டேன்னு சொல்லிடு” என்கிறான் இளையவன். அம்மா போனை எடுக்கிறார்.

எதிர்முனையில் வளைகுடா நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக உழைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்துவரும் முதிர்ந்த தந்தை நாராயணன். “ஏன் இவ்ளோ நேரம்!?” என்கிறார். சமையலறையில் வேலையில் இருந்ததாகச் சொல்கிறார் நளினி. மகன்கள் குறித்துக் கேட்க, தூங்கிவிட்டதாகப் பொய் சொல்கிறார். ”சாப்பிட்டுட்டுதானே தூங்கினாங்க, என்ன சமைச்சே?” எனக் கேட்கிறார். மகன்களுக்காக கோழிக்கறியும் மீனும் சப்பாத்தியும் புட்டும் சமைத்ததைச் சொல்கிறார். “மொய்தீன் ஊருக்கு வர்றான். எதும் பொருட்கள் வேண்டுமா!?” எனக் கேட்கிறார். திரும்பி மகன்களை ஒருமுறை பார்த்துவிட்டு நிதானித்து சற்று தணிந்த குரலில் “நாள் முழுக்க போட்டிருந்த சட்டையொன்றை துவைக்காமல் அனுப்பி வைங்க” என்கிறார். இது மலையாளத்தில் தேசிய விருது பெற்ற பத்தேமாரி படத்தில் உலுக்கும் ஒரு காட்சி. “எ..ன்...னா நளினி இது!” என்கிற நாராயணனின் கேள்வியோடு அந்தக் காட்சி நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை