Monday, 29 June 2020

வண்ணதாசன்

தனியாக சீட்டு விளையாடுபவர்களை
தனியாக சமைத்துச் தனியாக சாப்பிடுகிறவர்களை
தனியாக பழைய பாடல்கள் கேட்பவரை
தனியாக மது அருந்துகிறவர்களை
தனியாக அமர்ந்து நூலகங்களில் வாசிப்பவர்களை
தனியாக உலர்சலவையகங்களுக்கு வருபவர்களை
தனியாக நகராட்சிப் பூங்காவில் அமர்ந்திருப்பவர்களை
தனியாக தேவாலயங்களில் பிரார்த்திப்பவரை
தனியாக கிளிஜோஸ்யம் பார்ப்பவரை
தனியாக அரசமர இலையை அவதானிக்கிறவரை
தனியாக நின்று காக்கை கொத்தி இழுக்கும்
பெருச்சாளியின் திறந்த வயிற்றைக் காண்கிறவரை
தனியாக இருக்கும் அவர் பக்கம் உருண்டுவரும்
விளையாட்டுப் பந்தை எடுத்து வீசாதவர்களை
தன்னுடைய கால்பக்கம் நிழற்குடையில் ஒதுங்கும்
நாய்க்குட்டியைக் குனிந்து பார்க்காதவர்களை
ஒன்றும் செய்ய முடியாததற்கு வருத்தப்படாதீர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுத்த தனிமையில்
அப்படியே பத்திரமாக இருக்கட்டும்.
அவர்களின் தீவைச் சுற்றியே இருக்கிறது
அத்தனை திசைகளிலும்
நம் கடல்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை