கற்பு என்ற புனிதக் கற்பிதத்தின் பெயரில் பத்மாவதி என்னும் அரசி, மற்ற பெண்களுடன் சேர்ந்து நெருப்புக்குப் பலியானதைக் கொண்டாடுகிற இந்த நாட்டில்தான் நிர்பயா கொடூரங்கள் இன்னமும் தொடர்கின்றன. நிர்பயா பற்றிப் பரவலாகப் பேசப்பட்டபோது, அவருக்கு நீதி கோரியவர்கள் நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளிலும் அமுதாக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லையே ஏன் என்ற நியாயமான கேள்வி எழுந்தது. இந்தப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏதோ தீப்பெட்டியில் தீக்குச்சி உரசப்படுவது போன்று இயல்பானதொரு நிகழ்வாகக் கடக்கப்படுவது கலாசாரப் பெருமிதங்களின் போலித்தனத்தைக் காட்டுகிறது.
ஆயினும், நாடு தழுவிய போராட்டங்களுக்கு மட்டுமல்லாமல் விரிவான விவாதங்களுக்கும் நிர்பயா இட்டுச்சென்றது உண்மை. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு குழு அமைத்தது. அதன் பரிந்துரைகள் அடிப்படையில் சில புதிய விதிகளைக் கொண்டுவந்தது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டிய கட்டாயங்களை நிர்பயா ஏற்படுத்தியதும் மறுக்கவியலாதது.
வன்புணர்வுக் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், சிறார் என்பதற்கான வயது வரம்பு 18 என்றிருப்பதை 16 எனக் குறைக்க வேண்டும், வன்புணர்வுக் குற்றவாளியின் ஆண்மையை நீக்க வேண்டும் என்றெல்லாம் வர்மா குழுவுக்கு ஆலோசனைகள் வந்தன. குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதைவிட, குற்றவாளிகள்மீது ஏற்படும் உடனடி ஆவேச உணர்வுகளைத் தணிக்க மட்டுமே உதவக்கூடிய இப்படிப்பட்ட ஆலோசனைகளை நீதிபதி வர்மா குழு ஏற்கவில்லை.
மண உறவில் வன்புணர்வு
மற்றொரு முக்கியமான ஆலோசனையை ஏற்றுக்கொண்ட வர்மா குழு, அதைத் தனது பரிந்துரையாகவும் அளித்தது. ஆனால், அதை அன்றைய மன்மோகன் சிங் அரசு ஏற்கவில்லை. அப்படியொரு சட்டத் திருத்தம் கொண்டுவர இன்றைய நரேந்திர மோடி அரசும் தயாராக இல்லை. திருமண உறவில் வன்புணர்வு தண்டனைக்குரிய குற்றச் செயலாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை.
அந்தப் பரிந்துரை ஏற்கப்படாததற்கான காரணம் ஊகிக்க முடியாததல்ல. ஆணாதிக்கக் கட்டமைப்பில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடிய சட்டத் திருத்தத்துக்கான பரிந்துரை அது. பெருநகரம், நகரம், கிராமம் என்ற வேறுபாடில்லாமல், பணக்காரர், நடுத்தரம், ஏழை என்ற பாகுபாடில்லாமல், அந்தச் சாதி, இந்தச் சாதி, அந்த மதம், இந்த மதம் என்ற மாறுபாடில்லாமல் ஆதிக்கம் செலுத்துவதல்லவா `ஆண்மை’? அதிலே ஒரு `கர்வபங்கம்’ ஏற்பட ஏற்பாடு செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிற வேலை என்று அதிகாரம் மட்டுமே அரசியல் இலக்காகக்கொண்டவர்கள் எச்சரிக்கையோடு இருப்பதில் வியப்பில்லை.
கட்டிலறையில் நிலைநாட்டப்படும் ஆணாதிக்கம்
சமுதாயத்தின் சாதியாதிக்கக் கட்டமைப்புக்கான ஆதாரத்தளங்களில் ஒன்று கோயில் கருவறை. அதேபோல் ஆணாதிக்கக் கட்டமைப்புக்கான ஆதாரத்தளங்களில் ஒன்றுதான் கட்டிலறை. கட்டிலறையே ஒரு மாளிகை போலக் கட்டப்பட்டிருக்கிற கூடமாகட்டும், கட்டிலே இல்லாத பாய்த் தரையாகட்டும் அது சமத்துவம் உலாவும் இடமாக இல்லையே! மண வாழ்க்கையின் முக்கியக் கூறாகிய உடலுறவில் ஆணின் ஆதிக்கம்தான் காலகாலமாக நிறுவப்பட்டுவந்திருக்கிறது.
படுக்கையில் பெண்தான் ஆளுமை செலுத்துகிறாள், பெண்ணின் முன்னால் அப்போது ஆண் மண்டியிட்டுவிடுகிறான் என்பதாகவெல்லாம் கற்பனைக் கவிதைகள் நிறையப் புழங்கிவந்துள்ளன. விதிவிலக்காக இப்படிப்பட்ட நிகழ்வுகள் சில அங்கும் இங்குமாக இருக்கலாம். ஆனால், விதிவிலக்கு ஒருபோதும் பொது விதியாகாது.
உடலின் பாலியல் வேட்கை இயற்கையானது. அதில் பாலின வேறுபாடு எதுவுமில்லை. ஆனால், ஆணுக்கு எந்த நேரத்தில், எந்தச் சூழலில் அந்த உந்துதல் ஏற்பட்டாலும் அதற்கு இணங்க வேண்டியது பெண்ணின் இல்லறக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. வெளியே அலைந்து திரிந்து, பொருளாதாரப் போட்டிகளில் முனைந்து, குடும்பத்துக்காக உழைத்துக் களைத்து வருகிறான் என்ற தகுதி, படுக்கையில் சாய்ந்ததும் அவன் தன் வேட்கையை வெளிப்படுத்தக்கூட வேண்டியதில்லை, இணையாளின் ஒப்புதலையே இணக்கத்தையோ கோர வேண்டியதில்லை என்ற அதிகாரத்தைத் தருகிறது. நேரடியாக அவன் செயல்படத் தொடங்கலாம். அதில் எவ்வளவு மூர்க்கத்தையும் காட்டலாம். அப்படிச் செயல்படுவது ஆண்மையின் ஓர் இலக்கணம்.
இதுவே, பெண் தனது இயற்கையான வேட்கையை வெளிப்படுத்தினால், போதுமான அளவுக்கு எதிர்பார்த்தால், உடற்பசிக்கு அலைகிறவள் என்ற பட்டம் மாட்டப்படும். பல்வேறு வலிகளின் விளைவாகப் பெண் மணமுறிவு கோரும் நிலை ஏற்படுகிறது என்றால், அவளுடைய மற்ற வலிகளை மறைத்துவிட்டு, அவளுடைய உடற்பசியை உற்றவனால் தணிக்க முடியவில்லை என்பதால் வெளியேறுகிறாள் என்ற செய்தி பரப்பப்படும். உண்மையாகவே அப்படியோர் உடற்பசி இருந்தால், அந்தப் பசியாற்றும் உணவு கிடைக்காதபோது பெண்ணின் ஏக்கத்தில் உள்ள நியாயத்தை யாரும் பேசுவதில்லை. அந்த ஏக்கத்தை அடக்கிக்கொண்டு வாழ்ந்தால் உத்தமி மகுடம் அணிவிக்கப்படும்.
வாரிசின் விளைநிலம் மட்டும்தானா பெண்?
ஆனால், ஆணின் பசியாற்றுகிறவளாக பெண் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். அது, குடும்ப ஆலோசனைகளாக மட்டுமல்ல; சமூக அறிவுரைகளாகவும் புகட்டப்பட்டு வந்திருக்கிறது. அச்சம், நாணம், மடம் என்ற இலக்கண வரிசையில் கடைசியாக வரும் பயிர்ப்பு என்பதன் பொருள் கணவனின் வாரிசைப் பெற்றுத்தரும் விளைநிலமாக, அவனது உடல் வெப்பத்தைத் தணிக்கும் குளிர் நீராகப் பெண் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். இவ்வாறு கற்றுக்கொடுத்து அடுத்தடுத்த பெண்களைத் தயார் செய்வது பெண்களின் மூலமாகவே நடத்தப்படுகிறது. பாலியல் உறவிலும் ஆணாதிக்கத்தின் வெற்றி இப்படிப் பெண்ணின் மூலமாகப் போதிப்பதில்தான் இருக்கிறது.
தப்பித்தவறி யாராவது இப்படிப்பட்ட குடும்பப் பாலியல் ஒடுக்குமுறையில் தலையிட்டு, இது நியாயமா என்று கேட்டுவிட்டால், “உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டுக் கொச்சைப்படுத்திவிட்டு, “என் பெண்டாட்டி நான் எப்போது நாடினாலும் ஒத்துழைக்கத்தான் வேண்டும். அதற்குத்தானே திருமண உறவு” என்ற நியதியை எடுத்துச் சொல்வார்கள். இது, தலையிட வந்தவர்களை வாயடைக்கச் செய்வதற்காக மட்டுமல்ல’ மனைவிக்கு உணர்த்தி ஒழுங்குபடுத்துவதற்காகவும்தான்.
ஆறுதல் தரும் தீர்ப்பு
இப்படியான குடும்ப யதார்த்தங்களின் பின்னணியில்தான், நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையை மத்திய ஆட்சியாளர்கள் புறக்கணித்திருக்கும் நிலைமையில்தான், டெல்லி குடும்ப நீதிமன்றம், தற்போதுள்ள சட்டங்களின் துணையுடனேயே அருமையானதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு மணமுறிவு கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒரு கணவர். பாலியல் உறவுக்கு மனைவி ஒத்துழைக்கவில்லை, தன்னிடம் கொடூரமான முறையில் நடந்துகொண்டார் என்பது குற்றச்சாட்டு. உண்மையில், மனைவியின் மனநிலை, உடல்நிலை இரண்டையும் பொருட்படுத்தாமல் உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவது, அதற்காக வன்முறைகளைப் பயன்படுத்துவது, வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக அச்சுறுத்துவது உள்ளிட்ட அத்துமீறல்களைச் செய்தவர் கணவர்தான். அதற்கான உரிமம் – அவர் ஆண் என்பதும் அவர்களுக்குக் கல்யாணமாகிவிட்டது என்பதும்தான். மற்ற பல பெண்களைப் போலவே, தங்கள் பெண் குழந்தையின் எதிர்கால நலன் கருதிப் பொறுமையாக இருந்த மனைவி, பத்தாண்டுகளுக்கு முன்பாகத்தான், தனது சகோதரரிடம் தொடர்புகொண்டு வீட்டில் நடக்கிற கொடுமைகள் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். பின்னர் குடும்பத்தினர், நண்பர்கள் ஒத்துழைப்புடன் கணவரின் துன்புறுத்தல்களைத் தட்டிக்கேட்கத் தொடங்கினார்,
இதையெல்லாம் ஆதாரங்களுடன் அவர் நிறுவியதைத் தொடர்ந்து, கணவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார் முதன்மை நீதிபதி தர்மேஷ் சர்மா. இனி, அந்தக் கணவரை வேண்டாம் என்று தள்ளுவது பெண்ணின் உரிமை. அந்தத் தீர்ப்பில் அவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை... நாடு முழுவதும் நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மன்றங்களிலும் எடுத்தாளப்பட வேண்டியவை.
“திருமண வாழ்க்கை என்பதில் பாலியல் உறவும் உள்ளார்ந்ததாக இருக்கிறது என்பது உண்மைதான். பாலியல் உறவற்ற திருமண வாழ்க்கை ஒரு சாபக்கேடு என்று சொல்லப்படுகிறது. ஆனால், திருமணம் ஒரு சட்டபூர்வ பாலியல் நுகர்வு ஒப்பந்தம் அல்ல. மனைவியின் ஒப்புதல் அல்லது ஏற்பு இல்லாமல் பாலியல் உறவு கொள்ளக் கணவன் கட்டாயப்படுத்துவதற்குக் கணவனுக்குத் தங்கு தடையற்ற உரிமை உண்டு என்பதல்ல திருமணத்தின் பொருள். திருமணத்தால் மனைவியை வலுக்கட்டாயப்படுத்துகிற மேலாதிக்க நிலை கணவனுக்குக் கிடைக்கிறது என்றாகிவிடாது. மனைவியின் உடலுக்கும் மனசுக்கும் ஆன்மாவுக்கும் நலக்கேடு ஏற்படுத்தும் வகையில் கணவன் பாலியல் உறவுக்கு வற்புறுத்த முடியாது” என்று அந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.
பாலியல் உரிமைப் பிரச்சினையில் பெண்கள் இதுவரையில் சந்தித்துவந்துள்ள அவமதிப்புகள், விருப்பமில்லாமல் இணங்க வேண்டிய கட்டாயங்கள், ரசனையோடு ஈடுபடும் இயற்கையான சுகம் மறுக்கப்படும் வன்மங்கள் ஆகியவற்றை அறிந்தவர்கள் இது சாதாரணமான தீர்ப்பல்ல, பெண்கள் சாதித்து நிலைநாட்டுவதற்குத் துணையாக வந்துள்ள நீதி என ஏற்றுக்கொள்வார்கள்.
No comments:
Post a Comment