சிறப்புக் கட்டுரை: ஆண்களின் உலகில் பெண்களின் அவல வாழ்வு
ஆசிஃபா ஃபாத்திமா
அன்று காஷ்மீர் சிறுமி வன்புணர்வுச் செய்தியை வீட்டில் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். மனதை உருக்குலைத்துப்போடும் அச்சம்பவம், என்னை மிகவும் தாக்கிவிட்டது. இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இப்படி பல செய்திகள் என்னை துன்புறுத்தியிருக்கின்றன. இதனாலேயே பெரும்பாலும் நான் செய்திகள் வாசிப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால், இப்போதெல்லாம் வாசிக்க வேண்டிய கட்டாயம்.
அன்று ஒரு நாள் ஒரு செய்தி. டெல்லியிலோ, மும்பையிலோ ஒரு இடத்தில், தாயை பலாத்காரம் செய்யும்போது, அவளது கையில் இருந்த, பிறந்து சில தினங்களே ஆன குழந்தை அழுததனால் அதை ஓடும் வண்டியில் இருந்து தூக்கி வீசிவிட்டனர். அந்தத் தாய் அதன் பிறகு பிழைத்துக்கொண்டாள். ஆனால், அவளது மனநிலை எப்படி இருக்கும்? இப்போது அவள் எப்படி இருக்கிறாள்?
இதையெல்லாம் பெரும்பாலும் நாம் யோசிப்பதில்லை. எல்லாவற்றையுமே வெறும் செய்திகளாகக் கடந்துவிடுகிறோம். ஆனால், ஏனோ எனக்கு இவை அனைத்தும் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டன. இப்படி தினமும் ஏதாவது ஒரு செய்தி, ஒரு சம்பவம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்று நாமும் கடந்து சென்றுவிடுகிறோம்.
ஆதாரமான பிரச்சினை எது?
இந்தச் செய்தி முடிந்ததும் அப்படித்தான். “சரி, என்ன செய்ய? எல்லாம் நேரம்…” என்று சொல்லிச் சாப்பிட அமர்ந்துவிட்டோம்.
அப்போது அம்மா கேட்டாள், “எப்படி இவங்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வருது? ஒருத்தங்களோட வலி அவங்களுக்கு சந்தோஷத்த தருதா? ஒரு பொண்ண இப்படி கட்டாயப்படுத்தி உறவு வெச்சுக்கறது மூலமா என்ன சந்தோஷம் கிடைச்சிரும்?”
நான் எப்போதும் போல எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து மாமா சொன்னார், “பொண்ணுங்க ஆம்பளைங்க கைக்குள்ள இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்ல. படிக்கப் போறேன், வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு திமிருல ஆடுனா இப்படித்தான் நடக்கும். இயற்கை விதியே இதுதான். ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பு. பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் சந்தோஷமாக வாழலாம்.”
இதுதான் பிரச்சினை. ஆண்களின் இந்த எண்ணம், இந்தப் புரிதல், இதுதான் நம் பிரச்சினை.
பெண்கள் ஆண்களின் கைக்குள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம். இது நம் குடும்பங்களில் எவ்வளவு ஆழமாக வேர் விட்டிருக்கிறது என்று தெரியுமா? ஆண்கள் சிறிய வயதிலேயே இப்படி வளர்க்கப்படுகிறார்கள். அம்மாவைக் கட்டுப்படுத்துகிறார்கள். தங்கள் விருப்பங்களை, எண்ணங்களை அம்மாவின் மீது திணித்து, அதை நடைமுறையும்படுத்துகிறார்கள். ஒரு வீட்டில், பையனுக்குக் கீரை பிடிக்காது என்றால் அவ்வீட்டில் கீரை வைப்பதே இல்லை. அவர்களிடம் சென்று கேட்கும்போது, “பையன்தானேமா எல்லாம்?” என்று சொல்கிறார்கள்.
இந்த அபரிமிதமான அன்பை, அவன் தவறாகப் புரிந்துகொண்டு, வாழ்க்கையில் எப்போதுமே அதை நிலைநாட்டுகிறான். மனைவியிடம், தோழியிடம், காதலியிடம், சகோதரியிடம். அனைவரிடத்திலும் அவனது ஆதிக்கமே நிலவுகிறது. இதுதான் தலையாய பிரச்சினை. பெண்கள் ஆண்களுக்கு ‘அன்பு’ என்ற பெயரில் அடங்கிப் போவது.
இதை Take Off என்ற மலையாளப் படத்தில் அழகாக ஒரு வசனத்தில் நடிகை பார்வதி கூறுவார். அவருக்கு முதல் திருமணம் விவாகரத்தாகிவிடும். பிறகு இரண்டாவது திருமணம் நடக்கும். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை அதை ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்கு பார்வதி சொல்லுவார், “படிக்கும்போது அப்பாவிற்குப் பயந்தேன்; திருமணத்திற்குப் பிறகு ஃபைசல்; இப்போது இவன். நான் என்ன செய்வது?”
எவ்வளவு அப்பட்டமான உண்மை இது?
பெண்கள் ஆண்களின் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைச் சிறு வயதிலேயே ஆண்களின் மனதில் விதைத்துவிடுகிறோம். அந்த எண்ணம் எவ்வளாவு ஆபத்து என்று நமக்கு இப்போது தெரியாது. மனைவி தன் விருப்பத்தின்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினால், அவளை அடித்து உதைப்பது, வீட்டை விட்டு அனுப்புவது போன்ற செயல்கள் அனைத்தும் இந்த எண்ணத்தின் நீட்சியே. ஒரு பெண் தனக்கு நிகராக வெளியில் செல்கிறாள், இரவில் தனியாக அலைகிறாள், அவளுக்கும் சம உரிமை வழங்கப் பட்டு இருக்கிறது என்பதையே சில ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
காஷ்மீரக் குழந்தை விஷயத்திலும் இந்த ஆதிக்கச் சிந்தனைதான் வெளிப்படுகிறது. நமக்கு நிகராக அந்த இனத்தவர் எப்படி வரலாம், அப்படி வந்தால் என்ன செய்வோம் என்று பார்… என்றுதான் இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்பயா விஷயத்திலும் இதேதான் நடந்தது. இரவில் எப்படி ஒரு பெண் தனியாக அலையலாம்? இந்தச் சிந்தனைதான் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆணி வேர்.
பெண்ணின் பாலியலும் குடும்ப கௌரவமும்
அடுத்ததாக, ஒரு இனத்தின், குடும்பத்தின் கௌரவம், மரியாதை ஆகியவை எல்லாம் அந்தக் குடும்பத்துப் பெண்ணின் பிறப்புறுப்பில் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் முதல் இப்போதுவரை பல படங்களிலும் இதுதான் காட்சிப்படுத்தப்படுகிறது. நிஜத்திலும் இதுதான் நம்பிக்கை. ஒரு குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அப்பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தால் போதும்.
மேலே சொன்ன உரையாடலில் மூன்று முக்கியமான கருத்துகள் இருக்கின்றன. முதலில், ஆண்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க வேண்டும். அடுத்தது, ஆண்கள்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு. இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பெண்களுக்கு இப்போது யாரால் இவ்வளவு பிரச்சினை? ஆண்களால்தானே? நம் வீட்டு ஆண்களின் மனதில் பாலினப் பாகுபாடு / பாலின மேலாதிக்க உணர்வு இல்லாமல் வளர்த்தாலே போதும். பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்.
காதல் தோல்வி என்றால் ஆசிட் வீசுவது; மனைவியை வீட்டிற்குள் கொடுமைப்படுத்துவது ஆகிய செயல்கள் எப்போது ஆரம்பிக்கின்றன? காதலியோ மனைவியோ தன் கருத்தோடு முரண்பட்டால் தொடங்குகிறது. இந்தக் காதல் வேண்டாம் என்று சொன்னால் அவளை வசைபாடுவது, பாடல் எழுதுவது என்று கீழ்த்தனமான சிந்தனைகள் எதனால் வருகின்றன? “போயும் போயும் ஒரு பொண்ணு வேண்டாம் சொல்லிட்டாடா!” இதுதான் காரணம். இந்த மனநிலையை எப்போது நம்மால் மாற்ற முடிகிறதோ, அப்போதுதான் சமூக மாற்றம் நிகழும்.
எது இயற்கையின் நியதி என்றே பலருக்குத் தெரியவில்லை. பெரும்பான்மையான உயிரினங்களில் பெண் இனம்தான் தலைமைப் பொறுப்பு தாங்குகிறது. தேனீக்கள், யானைகள், சிங்கங்கள், எறும்புகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன், மனிதர்களிலேயே அப்படித்தான். நம் சமூகக் கட்டமைப்பு மாற்றத்தினால் இப்படி ஒரு சூழலில் வந்து நிற்கிறோம்.
ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அல்லது பேசாமலும் இருக்கலாம். ஆனால், பெண்கள் படிக்கச் செல்வதினால், வேலைக்குச் செல்வதினால்தான் இந்தப் பிரச்சினை என்று கூறுவது அறியாமை மட்டுமல்ல, ஆதிக்க உணர்வின் தடித்தனமும்கூட. ஆனால், இதுதான் பல வீடுகளில் நடப்பது. இன்றளவும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் புரிய வைப்பது பெரும்பாடு. அதோடு ‘வாயாடி’ என்ற பட்டத்தையும் பெற வேண்டியிருக்கிறது.
என்ன செய்வது, பெண்ணாகப் பிழைக்க வேண்டுமே?