இப்போது மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்து கார்டூன் பார்க்கும் குழந்தைகளை பார்க்கும் போது சில வேளை என் பால்யம் எனக்கு ஞாபகம் வரும் . இப்போது அளவுக்கு அதிகமாய் டிவி பார்ப்பதால் அவர்களுக்கு எதுவுமே புதிதாய் அதிசயமாய் தெரிவதில்லை. அப்போதெல்லாம் டிவி பார்ப்பது என்பது விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போவது போல சுவாரஸ்யமாக விஷயம், எப்போதாவது தான் பார்க்க முடியும்.
எந்நேரமும் நகைச்சுவை, பாடல்கள் என்று தனியாக பார்க்க சேனல்கள் கிடையாது எதுவாக இருந்தாலும் ஒரே தூர்தர்ஷனில் தான் பார்த்தாக வேண்டும்.வெள்ளி கிழமை ஒலியும் ஒளியும் பார்பதற்காகவே எத்தனையோ நாட்கள் விளையாட்டை நிறுத்தி, வீட்டு பாடங்களை முன்னவே எழுதி தயாராய் இருந்திருக்கிறோம், அப்படி தயாராய் காத்திருக்கும் போதிலும் திடீர் என்று தடங்கலுக்கு வருந்திகிறோம் என்று பல நிறங்கள் கொண்ட பலகை வரும் போது சில நாட்கள் அழுகை கூட வந்ததுண்டு, இதையும் மீறி நல்ல பாடல்கள் போடும் போது தொலைக்காட்சி சரியாய் தெரியாமல் புள்ளியடிக்கும், அதை சரி செய்ய அப்பாவை மொட்டை மாடிக்கு அனுப்பி கீழ் இருந்து இப்போ பரவாஇல்லை என்று கத்தி அப்பாவை கீழே அழைத்து முடிப்பதற்குள் பாடல் முடிந்திருக்கும்.
சனி கிழமை வந்தாலே இன்று இரவு என்ன படம் போடுவானோ என்ற பரபரப்பிலேயே அழகாய் தொடங்கும் காலைகள், அவன் சலித்து போகும் அளவுக்கு விளம்பரங்களை போட்டு படத்தை முடிக்கும் போது கண் நிறைய தூக்கத்துடன் இரவு சுமார் ஒரு மணி ஆகி இருந்தாலும் அடுத்த சனி கிழமை அதெல்லாம் மறந்து போய் இருக்கும். அப்படி நள்ளிரவு வரை சிரித்து சிரித்து ரசித்த படங்கள் இன்று பார்த்தாலும் அலுக்காத 'தில்லு முல்லு', 'சிம்லா ஸ்பெஷல்', 'திருவிளையாடல்' இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஞாயிறு காலை பத்து மணிக்கு போடும் மகாபாரதம் பார்க்க, எதிர் வீட்டில் இருக்கும் என் ஆச்சி வருவார்கள், எப்போதுமே எதிரில் இருந்தாலும் அதென்னமோ மகாபாரதம் பார்க்கும் போது தான் எல்லாரும் அதிக நேரம் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அனேக ஞாயிறு காலைகளில் அடை தோசை தான் இருக்கும், பட்டாசலில் மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து ஆச்சி தோசை ஊத்தி கொடுக்க நாங்கள் மகாபாரதம் பார்த்த படியே சாப்பிடுவோம். எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து அப்படி சாப்பிடுவதே பெரிய கொண்டாட்டமாய் தெரியும் எங்களுக்கு.
இது இல்லாமல் காலை எழுந்த உடனேயே அநேகமாய் போட பட்டிருக்கும் ரேடியோக்கள் வேறு நம்மை இன்னும் குஷி படுத்தும். நெல்லை வானொலியில் புது சினிமா பாடல்களை அரிதாய் தான் போடுவார்கள். புது பாடல்களை கேட்பதெனில் கண்டிப்பாய் சிலோனில் கேட்டு தான் அறிமுகம் எங்களுக்கெல்லாம். புது பாடல்களை முதலில் கேட்கும் போது அதற்கான காட்சிகள் இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை வரும், படம் போய் பார்த்த உடன் சில நேரம் அதைவிட நன்றாகவோ அல்லது கற்பனைக்கும் பாடல் காட்சிகளுக்கும் சம்மந்தமே இல்லாமலோ இருப்பது கூட சுவாரஸ்யமாய் தான் இருக்கும். அப்படி நிறைய கற்பனை செய்து ஏமாந்து போன பாடல் நிறைய உண்டு. பாடல்களுக்கு இடையில் அதை விரும்பி கேட்டவர்களின் பெயர்களை ஊர் பெயருடன் சொல்வார்கள், அந்த அறிவிப்பாளர்களின் உச்சரிப்பில் பெயர்பட்டியல் கூட கேட்பதற்கு அருமையாய் தான் இருக்கும்.
No comments:
Post a Comment