Friday, 16 February 2018

Raajaaa

மனம் மகிழ்ச்சியாகும் போது சட்டென்று உதடுகளில் எதாவது ஒரு பாடல் வந்து ஒட்டி கொள்ளும், அந்த பாடலின் இனிமையும் ஸ்வரங்களும் மனதில் நிறைந்து வழியும். ஆயிரம் கவிதைகள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை ஒரு பாடலால் ஏற்படுத்தி விட முடியும் என்றே தோன்றுகிறது.

எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அதிகம் கேட்டு வந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். அதிலும் காதல் பாடல்களின் வரிகளை ஆழமாய் கேட்டு புரிந்துகொண்ட ரசிக்க தொடங்கிய போது உலகமே இன்ப மயமாய் தெரிந்தது.ரேடியோவில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு புது பாடல்களையும் இந்த பாடலுக்கான காட்சி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காய் இருக்கும் எங்களுக்கு. அதிலும் இந்த பாடலை விரும்பி கேட்டிருப்பவர்கள் என்று நீளும் பெயர்கள் கூடுதல் மகிழ்வை ஏற்படுத்தும், என்றாவது நம் பெயர் நமக்கு பிடித்த பாடலின் முன் அறிவிக்க பட்டால் அன்றைக்கு கால் நிலத்தில் நிற்காது.

இளையராஜாவிற்கு முன்னும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் எத்தனையோ பாடல்கள் பனி இரவில் நிலவின் குளிர்ச்சியை தந்திருகின்றன.
காற்று மேலி இடை கண்ணம்மா, இரவும் நிலவும் தொடரட்டுமே, இந்த மன்றத்தில் ஓடி வரும், மாலை பொழுதின் மயக்கத்திலே இப்படி எவ்வளவோ இனிமையான கானங்கள் இருக்கின்றன சொல்லி செல்ல. வாஞ்சையான கரங்களும் மென்மையான அம்மாவின் சேலையும் தரும் சுகங்களை இந்த பாடல்கள் எனக்குள் ஏற்படுத்தும் இமைகள் எனை கேட்காமலே மூடி கொள்ளும்.

ராஜாவின் இசையில் ரசித்த பாடல்களும் அவற்றால் மனதில் விரியும் காட்சிகளையும் ஒன்று சேர்த்த ஒரு அற்புத கனவிலேயே வாழ்க்கை முடிந்திருக்க கூடாதா என தோன்றும். பூங்கதவே தாள் திறவாய்(நிழல்கள்) பாடலில் வரும் துவக்க இசை (இதை ஆங்கிலத்தில் prelude என்பார்கள்) அடர்ந்த அருவி கரையில் யாரோ நம்மை ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி விடுவதை போல ஒரு சுகமான சிலிர்ப்பை ஏற்படுத்தும். நி ஒரு காதல் சங்கீதம்(நாயகன்) கேட்கும் போதே இப்போதே மணமான பெண்ணின் வெட்கமும் அந்த அழகான கடற்கரை மணலும் நினைவில் விரியும்.

ஒரு காதலனின் பரிவும் பாதுகாப்பான மடியின் கதகதப்பை நினைவுபடுத்தும் ஒ பாப்பா லாலி, காதலின் தயக்கத்தையும் அது மனதில் ஏற்படுத்தும் இன்ப அதிர்வையும் புலபடுத்தும் கொடியிலே மல்லியப்பூ, ராஜாவின் 'how to name it, nothing but wind' மழை நாளில் ஜன்னல் அருகே தேநீரோடு அமர்ந்து கேட்கும் போது உலகம் அப்படியே அந்த கணத்திலேயே உறைந்து போகட்டுமே என்று தோன்றும்.

லதா மங்கேஷ்கரின் மீரா பஜன் கேட்ட போது ஒரு குரலில் இவ்வளவு உருக்கம் இருக்க முடியுமா என்ற பிரமிப்பு ஏற்பட்டது, எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை, அன்னமாச்சார்யா கீர்த்தனைகளில் வழியும் பக்தியை கேட்டு பல நாட்கள் என் கண்கள் கலங்கி மெய் சிலிர்த்து போய் இருக்கிறேன். ரஹ்மானின் வந்தே மாதரத்தை கேட்டால் இது என் நாடு என்ற பெருமிதம் மனதில் வரும். இப்படி அற்புதமான இசைகளை கேட்கும் போதி மானத்தில் இனிமைகள் நிறைந்திருக்கும், இப்படி பட்ட இனிய மனைகளை இசை அழைத்து செல்லும் இடம் சொர்கத்தை தவிர வேறு எதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை