Saturday, 30 June 2018

பிடித்த பாடல்

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே 
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம் 
மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் 
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் 
என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் 
அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் 
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் 
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்
(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே 
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் 
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் 
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு 
வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை 
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் 
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

பிடித்தவர்கள்

பிடித்தமானவர்களின் சிறுவயது போட்டோவைப் பார்க்கும்போது ஏற்படும் ஆச்சர்யமான, ஆழமான உணர்வை வார்த்தைகளில் சொல்லமுடியாது

Friday, 29 June 2018

குறள்

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு – குறள் 987

பாடல்

படம் : அக்னி நட்சத்திரம்
இசை : இளையராஜா
பாடியவர் : S.ஜானகி, K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே.. ஆ... ஆ... ஆ...
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

Tuesday, 26 June 2018

Pasted தத்துவம்

கடவுள் எங்கே நம்மை பார்க்க போகிறார் என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து முதுமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் அறையில் எழுதப்பட்டிருந்தது "ICU"..!

Paavannan

சிறப்புக் கட்டுரை: வெயில் எரிக்கும் விளைநிலம்!

திருஞானசம்பந்தம்

பாவண்ணனின் நாவல்கள்

நான் விரும்பிப் படிக்கக்கூடிய முக்கியமான எழுத்தாளர் பாவண்ணன். கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பல ஆக்கங்களைக் கையெழுத்துப் பிரதியாகவே படித்திருக்கிறேன். அவர் தேர்ந்த சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், சுவாரஸ்யமான உரையாடல்காரர். பன்முக ஆளுமை.

அன்பு, பாசம், சக மனிதர்களின் வாழ்வின் மீது இருக்கும் அக்கறை, சமூக நடப்பின் மாற்ற முடியாத அங்கத்தின் வலி, இயற்கையின் மீதிருக்கும் ஈர்ப்பு, இவையனைத்தும் அவரின் எல்லா எழுத்துகளிலும் இருக்கும் பொதுத் தன்மை எனலாம். இவையே பல நிலைகளில், வெவ்வேறு வடிவங்களில் அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவாகியுள்ளன. சொல்ல நினைத்த கருப்பொருளை வேறு எந்த வடிவத்திலும் அடக்க முடியாதபோது நாவல் வடிவெடுக்கிறது. பாவண்ணனுடைய மூன்று நாவல்களும் இப்படித்தான் தன் வெளியை அடைந்திருக்கக்கூடும்.

மூன்று நாவல்களும் அவரது இள வயதில் எழுதப்பட்டவை. அதற்குப் பிறகு பல நூறு சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. பல முக்கியமான படைப்புகளைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழியாக்கம் செய்திருக்கிறார். சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும் என்ற சுய சரிதை நாவல், தமிழ் தலித் இலக்கியத்திற்கு வந்த ஒரு முன்னோடி மொழியாக்கம் எனலாம். ஆனால் இன்று தலித் இலக்கியத்தைப் பற்றிப் பேசுபவர்கள், அதை மௌனமாக கடந்து விடுவார்கள். மகாபாரதத்தை முன் வைத்து எழுதிய எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் மற்றுமொரு பெரும் மொழியாக்கம்.

பாவண்ணணின் நாவல் களம்

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி என்ற மூன்று நகரங்களுக்கிடையே விரவியிருக்கும் கிராமப் பகுதிதான் பாவண்ணனுடைய நாவல்களின் களம். இந்த மண்ணும், மண்ணோடு ஒட்டியும் வெட்டியும் வாழும் மக்களின் அன்றாடப் பாடுகளும்தான் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன.

விவசாயியின் வாழ்க்கை என்பது ஆழமறியாத ஆழ்கடல் மேல் திசையற்றுப் பயணிக்கும் பயணம் போன்றது. ஆரம்பமும் முடிவும் அறியாத பயணம். ஓயாத உழைப்பு. காலை முதல் மாலை வரை மண்ணோடும் மாடுகளோடும் பாடுபடும் பாட்டாளி வாழ்க்கை. நீரோடும் நிலத்தோடும் வாழ்பவனின் விவசாய நிலத்தைப் பிடுங்க நினைப்பவன் எவனோ அவன்தான் அந்த ஊரின் பெரிய மனிதனாகவும் அவனைவிட உயர்ந்த சாதிக்காரனாகவும் இருப்பான். முத்துசாமியின் உழைப்பில் கறுகறுவென்று சூல் பிடித்து நிற்கும் நெல்வயல் ரெட்டியின் கண்ணை உறுத்துகிறது. அவனுக்குச் சொந்தமாக இருக்கும் நிலத்தை அபகரிக்க வசதியாக அவன் அப்பன் எழுதிக் கொடுத்த அடமானப் பத்திரம் ரெட்டியின் கைகளில். நிலத்தை இழந்து வெறும் கையோடு ஊரை விட்டு வெளியேறிப் புது மண்ணில் உழைப்பாளியாகக் கால் பதிக்கும் முத்துசாமி உலக விவசாயிகளின் சோகப் படிமம். வேற்று ஊரில், கடின உழைப்பில் சொந்தமாகச் சம்பாதித்த இருபது காணி நிலம் என்பது சாதாரண வெற்றியல்ல. அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பில் பேர் பாதி மனைவிக்குச் சொந்தமானது.

ஆனால் தலைமுறை மாறுகிறது. பேரன் ஆறுமுகத்திற்கு உழைப்பின் மீது நம்பிக்கை இல்லை. பாசத்தோடு வளர்த்த தாத்தாவின் உழைப்பில் உருவாக்கிய விவசாயத்தின் மீது ஈர்ப்பில்லை. கல்வியில் நாட்டமில்லை. குறுக்கு வழியில் சீக்கிரம் மிக உயர்ந்த இடத்தையும் பெரிய பணத்தையும் அடைந்துவிடத் துடிக்கிறான். உழைப்பால் மட்டுமே உயர்ந்த குடும்பத்தை உதாசினப்படுத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

சமூக மாறுதல்களும், எப்படி சினிமாவும் அரசியலும், சாராயமும் மக்கள் மனதில் முன்னேற்றத்தின் குறுக்கு வழிகளாக குடியேறுகின்றன என்பதும் ஆறுமுகத்தின் பதற்றத்தின் வழியாகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உழைப்பைத் தவிர வேறு ஒன்றையுமறியாத குடும்பப் பின்புலத்திலிருந்து வருபவன், அதே உழைப்பைத் தவிர வேறு எல்லாத் தில்லுமுல்லுகளிலும் ஈடுபடும் மனநிலை ஓட்டத்தை பாய்மரக் கப்பல் தெளிவாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. விவசாயியின் மனம் ஒருபோதும் எதிர்மறையாக நினைக்கவே முடியாது. காய்ந்த மண்ணை ஏரோட்டி சீராக்கி, எருவு அடித்து, எப்படியும் இந்த அமாவாசைக்கு மழை வந்துவிடும், விதைச்சிடலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும். அது ஒரு மாபெரும் உத்வேகத்தைக் கொடுக்கும். எல்லாம் கைவிட்டுப் போனாலும், நம்பிக்கையின் கீற்று உயிரைக் கொடுக்கும். அத்தகைய நம்பிக்கைதான் முத்துசாமி தாத்தாவை மீண்டும் தென்னங்கன்றை நடவைக்கிறது.

ஆனால், சமகாலத்தில் நாம் காணும் காட்சி வேறு விதமாகத்தான் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் நம்பிக்கை இழக்கும் புள்ளி எது? ஏன் அவர்கள் கைவிடப்பட்டதாகக் கருதுகிறார்கள்? இன்றைய விவசாயம் எதை நோக்கி நகர்கிறது?

இந்தக் கேள்விகள், இனி எழுதப் போகும் ஒரு விரிவான நாவலுக்கான சட்டகங்கள் ஆகலாம்.

குழந்தைகளின் பசி ஏக்கம்

காற்றின் வேகம் தாங்காமல் கலைந்து சிதறும் மேகம் போல பசியின் உக்கிரம் மனிதனின் நம்பிக்கைகளைச் சிதறடித்துவிடுகிறது. நிரந்தர வேலை குடும்பப் பசி போக்கும் ஆதாரம். அது இல்லை என்னும்போது எளிய மனிதர்களின் வாழ்க்கையைக் காலம் புரட்டிப் போட்டுவிடுகிறது. பசியற்ற நாளே பெருங்கனவு. காலை நேரம். வேலைக்குப் போகும் அப்பன் வீட்டு வாசலில் நிற்கிறார். நிறைய தண்ணீர்விட்டு கொஞ்சம் சோற்றுப் பருக்கைகளைப் போட்டு உப்பு சேர்த்து ஒரு சொம்பு கொடுக்கிறாள் மனைவி. சுவரோரம் பிள்ளைகள் ஆளுக்கொரு பக்கம் நிற்கிறார்கள். சொம்பில் கை விட்டுப் பருக்கைகளைப் பிழிந்து பிள்ளைகளின் கைகளில் கொடுத்துவிட்டு வெறும் கஞ்சித் தண்ணியைக் குடிக்கிறான் தந்தை. தாய் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பிள்ளைகளின் கண்களில் ஒளிரும் பசியின் ஏக்கத்திற்கு முன் உலகமே தோற்று நிற்கும். அந்த ஏக்கத்தின் புள்ளிதான் சிதறல்கள், வாழ்க்கை ஒரு விசாரணை ஆகிய நாவல்கள் சுழலும் ஆதார மையம்.

காளியப்பன், எருதுகளுக்கு லாடம் அடித்துப் பிழைப்பு நடத்துபவன். நல்லவன். அதில் வரும் சொற்பக் காசில் குடும்பம் நடத்துபவன். வருமானம் குறைவாக இருந்தாலும் நேர்மையான வாழ்க்கையை வாழ்பவன். வறுமையிலும் வாழ்வை யோக்கியமாக நடத்துவது எப்படி என்று தன் அம்மா சொல்லி வளர்த்ததாகக் கூறுகிறான். அம்மாவால் வளர்க்கப்பட்டவன். வசிக்கும் தெருவில் எல்லோராலும் மதிக்கப்படுபவன். முடிந்த அளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்பவன்.

ஆனால், அவன் தம்பி செய்யும் தவற்றால், குடும்பமே இக்கட்டில் மாட்டுகிறது. காலம் காலமாக போலீஸார் எளிய மனிதர்களைக் கடுமையாகத்தான் நடத்துகிறார்கள். எளியவர்களின் சிறு சிறு தவறுகளுக்கு விசாரணை என்ற பேரில் அடி, உதை, ஏச்சு. தொடர்ந்து அவன் தம்பி ஊரில் நடமாட முடியாத அளவுக்கு அவமானப்பட்டுப் போகிறான். தொழிலுக்கு ஆதாரமாக இருந்த சைக்கிள் கைவிட்டுப் போகிறது. தம்பி ஊரை விட்டே கண் காணா இடத்துக்கு ஓடிப்போகிறான். தாள முடியாத அளவிற்குக் குடும்பம் பசியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

அவனோடு பல விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். கிராமத்தில் ஒற்றுமை இல்லாமல் முதலாளிகளுக்காகச் சண்டையிட்டு போலீஸ், கேஸ் என்று கோர்ட் வரை படியேறுகிறார்கள் இளவட்டப் பயல்கள். யாருக்காகச் சண்டையிட்டார்களோ, அந்தப் பெரிய மனிதர்கள் உதவிக்கு வருவதேயில்லை. வடிவேலு தாத்தாவிற்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்கவில்லை. ஊரில் முதலாளி என்று இன்று இருப்போர், எப்படி சொத்து சேர்த்தார்கள் என்ற கதையைச் சொல்கிறார். எல்லாமே அனுபவத்தின் சத்திய வார்த்தைகள்.

இந்த நாவல் முழுவதும் பலவிதமான மனிதர்களை நடமாட விட்டிருக்கிறார் பாவண்ணன். அருக்காணியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தினம் தினம் கொடுமைக்கு ஆளாக்கும் ரங்கன்கள் எல்லா ஊரிலும் இருக்கிறான்கள். அருக்காணிகளால் ஓடுகிறது அப்படிப்பட்ட குடும்பத்தின் வாழ்க்கை.

குடும்பம் என்ற சிறிய அமைப்பும், அதை விடப் பெரிய கிராமம் என்ற கூட்டமைப்பும் மாறி நகரம் என்ற பகாசுர அமைப்பில் எப்படி மனித இயல்புகள் கரைந்துபோகின்றன என்ற காட்சிகள் பெருமாள் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

கிராமத்தில் பாசமானவனாக இருந்த பெருமாள், நகரத்திற்குப் போன கொஞ்ச காலத்திலேயே முற்றிலும் மாறியவனாகத் திரும்பி வருகிறான். இது கண்ணம்மாவின் எண்ண ஓட்டத்தின் மூலமும் ஏக்கச் சொற்களின் வழியாகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆசை வார்த்தைகள் கூறி மயக்கப் பார்க்கும் பெருமாளிடமிருந்து கண்ணம்மா தன்னை காத்துக்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. தனக்கும் ஆசை இருந்தாலும், தன் குடும்பம், அண்ணன், அவர்கள் அவள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை என்ற எண்ணம் அவளைக் காக்கிறது. முதலில் சிரிப்போடு நாவலில் உள்ளே வரும் காளியப்பன், திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு, போலீஸால் அடிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடக்கிறான் முடிவில். காளியப்பன் இப்போது மயங்கிய நிலையில் எல்லோருடைய மனசாட்சியையும் விசாரிப்பதில் முடிகிறது நாவல்.

சில நேரங்களில், ஒற்றைச் சொல் ஓராயிரம் எண்ணங்களை மனத்தில் கிளர்த்திவிடும். அப்படியான ஒரு சொல்தான் சிதறல்கள். எனக்குப் பிடித்த கதை இது.

நம் காலத்தின் கதை

நம்பிக்கைகள் சிதறும் காலமிது. மக்களைக் காக்கும் என நம்பியிருந்த அமைப்புகள் எல்லாம் கருணையற்று மக்களைச் சுரண்டும் காலமிது. காவல் தெய்வங்கள், அற்பர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி, குருவியைச் சுடுவதைப் போல நெஞ்சைப் பிளக்கும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எண்பதுகளில், புதுச்சேரியில் நடந்த ஒரு சமகாலப் பிரச்சினையை முன் வைத்து எழுதப்பட்டது சிதறல்கள் நாவல். அது ஒரு மனிதனின் அல்லது ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு நகரத்தின் பிரச்சினை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினை. அப்போதுதான் மத்திய அரசு வேலையில் சேர்ந்த ஓர் இளைஞனின் கண் முன்னால், பசியோடும் பட்டினியோடும் வாட்டத்தோடு எதிர்வரும் மனிதர்களின் பிரச்சினை.

அவர்கள் பிறவி ஏழைகள் இல்லை. பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் வளமாகப் பெண்டு பிள்ளைகளோடு வாழ்ந்தவர்கள்தான். காலம் காலமாக இருந்து வந்த பஞ்சு மில் தொழிலாளர்கள். ஆலை வேலை என்பது அவர்களுக்கு மாபெரும் நம்பிக்கை. மக்கள் மத்தியில் மரியாதை இருந்தது. கடுமையான உடல் உழைப்பைக் கோரும் வேலை. ஆனால், அதையெல்லாம் அவர்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதே இல்லை. ஆலையைத் தொடங்குவதற்கு என்ன காரணங்கள் இருந்ததோ அவர்களுக்குத் தெரியாது. ஆலை இருந்தது. காலம் காலமாக இருந்தது. வாழ்க்கையும் இருந்தது.

இன்று ஆலையை மூடிவிட்டார்கள். அதற்குப் பின் இருந்த அரசியல், பொருளாதார, நிர்வாகப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால், அதை மட்டுமே நம்பித் தம் வாழ்க்கையை ஓட்டிவந்த ஆறாயிரம் குடும்பங்களின் வாழ்வு திக்கற்றுத் தெருவில் வீசப்பட்டுவிட்டது.

எப்படியாவது ஓரிரு மாதங்களில் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆலையைத் திறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆலையைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பூட்டிய கதவு திறக்கவே இல்லை. வேலையில்லை, சம்பளமில்லை, வீட்டில் விற்க ஒன்றுமில்லை, கடன் கொடுக்க யாருமில்லை. ஆனால், பசி இருக்கிறது. கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து நகர மில் வேலைக்கு வந்தவர்களுக்குத் திரும்பிப் போக வழியில்லை.

ஆலைக் கதவு மூடிய பிறகு வாழ்க்கைக் கதவு திறக்கும் புதிய புதிய நெருக்கடிகள், சமாளிக்க முடியாமல் படும் வேதனைகளும் துயரங்களும் நாவல் முழுதும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

வாடிய முகங்களின் தொகுப்பு

எத்தனை எத்தனை முகங்கள். ஒருவேளை சோற்றிற்காக வேலை தேடி, கடுமையான வெயில் வாட்டும் பொழுதுகளில் வதங்கிய முகத்தோடு அலையும் அப்பனின் முகங்கள்.

ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுத்துவிட்டு நிற்கும் அம்மாக்களின் வெற்று முகங்கள்.

விளையாட்டை மறந்து, சிரிப்பை மறந்து, பள்ளியை மறந்து ஏக்கத்துடன் வதங்கிய பிள்ளைகளின் முகங்கள்.

கடும் நெருக்கடிகளைப் பயன்படுத்தி, வீட்டு வாடகைக்குப் பொண்டாட்டியை அனுப்பு என்று கேட்கும் கோர முகங்கள்.

அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் முகங்கள்.

தன் பேச்சைக் கேட்காமல் வேறொரு சாதிப் பெண்ணைக் கட்டிக்கொண்டவன், நெருக்கடி தாங்க முடியாமல் கைக்குழந்தையோடு திரும்பி வரும்போது அசிங்கப்படுத்தித் துரத்தும் அப்பனின் சாதி வெறி முகம்.

கருணையற்ற முகங்கள். தன் ஏழ்மையிலும் உதவும் எளிய கருணை மிகு முகங்கள். திரும்பிய பக்கமெல்லாம் வித விதமான முகங்கள். எந்த முகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட முகங்கள். இப்படி நாவலெங்கும் பல விதமான மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து போகிறார்கள்.

தன் உடல் உழைப்பையும் அது கொடுத்த வருமானத்தையும் நிரந்தரம் என்று நம்பிய எளிய மனிதர்கள். சொற்ப வருமானத்தில் தம் வாழ்வை அமைத்து வாழ்ந்தவர்கள். அதற்கு வழியில்லாதபோது திக்கற்று நிற்கிறார்கள். ஏன் இந்த அவல நிலை?. ஏன் இந்த ஆதாரமற்ற வாழ்க்கை? இங்குதான் நாவல் சொல்லாமல் விட்ட கதை ஆரம்பமாகிறது.

எழுதிய ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் எழுதாமல் விட்ட வரிதான் நாவலை முழுமையாக்கும். இந்த நாவலில் வரும் யாருக்கும் தன் குடும்பத்தைத் தாண்டி ஒரு வாழ்க்கையே இல்லை. அப்படி ஒரு சமூக வாழ்வே இல்லாதவாறு அவர்கள் கட்டமைக்கப்படுகிறார்கள்.

நாவல் மௌனமாகக் கடந்த ஆலை மூடப்படுவதற்கான காரணங்கள், பன்னாட்டு முதலாளிகளின் லாபம், அது நிர்பந்தப்படுத்தும் போட்டி, தொடர்ந்து சுரண்டப்படும் உழைப்பு… இவையெல்லாம்தான் நாவலின் மறுபக்கம். இந்த வரலாற்றையும் அதன் சூட்சுமத்தையும் அறிந்துகொள்வதற்கான தேடலை நோக்கி வாசகனை நகர்த்துகிறது இந்த நாவல்.

இன்றும் எதுவும் மாறிவிடவில்லை. மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காகத்தான் தூத்துக்குடியில் 13 பேரைக் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். அன்று 1936இல், கேள்வி கேட்டதற்காகத்தான் புதுச்சேரி ஆலையில் 12 பேரைச் சுட்டுக் கொன்றார்கள். பொதுமக்களின் விழிப்பு எப்போதும் கொடூரமாகவே நசுக்கப்பட்டிருக்கிறது. இதில் எல்லா அரசுகளும் அரசை இயக்கும் பண முதலாளிகளும் ஒன்றுபோலத்தான் செயல்படுகின்றனர்.

பஞ்சாலை என்னும் கதை மையக் களத்தை ஒருவகையில் மாபெரும் படிமம் என்றே சொல்லலாம். உச்சத்துக்குச் சென்று சரிந்து விழுகிற எல்லாத் தொழில்களுக்கும் அச்சரிவால் கைவிடப்படும் மக்கள் கூட்டத்துக்குமான ஒரு படிமம். ஒரு காலத்தில் ஓங்கி வளர்ந்து இன்னொரு கட்டத்தில் தளர்ந்து விழ, ஊழியர்களை வெளியேற்றிவிட்டுத் திகைத்து நிற்கும் கணிப்பொறி நிறுவனங்கள் வரைக்கும் இப்படிமத்தை முன்வைத்து அசைபோட முடியும்.

சிதறல்கள் நாவல் எழுதப்பட்ட காலத்தைவிட இன்றுதான், இப்போதுதான் மிகவும் தேவையாய் இருக்கிறது. எழுதுவதும் பேசுவதும் அதைப் பதிவு செய்வதும் சமூகப் போராட்டச் செயல்பாடுகளின் வடிவம்தாம் அல்லவா?

பாவண்ணனின் மூன்று நாவல்களுமே பெரும் வாழ்வின் சின்னஞ்சிறு பகுதியைத்தான் பேசியிருக்கின்றன. அவரின் ஆகச் சிறந்த நாவல் படைப்பாக்கம் இனிமேல்தான் வரப்போகிறது. வலசைப் பறவைகள் என்று பெயரிட்டு 500 பக்கங்களுக்கு மேல் எழுதிய கையெழுத்துப் பிரதியை வாசித்திருக்கிறேன். எழுதிய வரை அருமையாக இருந்த கதை, ஒரு நல்ல கலைப் படைப்பாக வந்திருக்கும். மக்களிடம் இருந்து பெற்ற நேரடி அனுபவங்களை வைத்து எழுதியதாகக் கூறினார். அவரின் எல்லாப் படைப்புகளும் எளிய மக்களின் பாசாங்கற்ற வாழ்வின் மீது வைக்கும் பரிவு மிக்க பார்வைகள்தாம்.

மக்களிடம் பெற்றதை மக்களுக்குத் திருப்பித் தருவதுதானே கலை.

(எழுத்தாளர் பாவண்ணனின் 60 வயது நிறைவை ஒட்டி அண்மையில் சென்னையில் அவரது படைப்புகளைக் குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.)

Friday, 22 June 2018

குழந்தைமை

இயற்கையின் வினோதங்களைக் கண்டு பரவசம் கொள்ளும் குழந்தைமை 

பிடித்த பாடல்

படம்: ஆடுகளம்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பி; எஸ்.பி.சரண், பிரசாந்தினி
பாடலாசிரியர்: சினேகன்

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகள போல
திணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மிரளுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே
எனை எரிச்சுபுட்டே நீயே

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
தரரரரா…

மழை சாரல் விழும் வேளை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்

ஹோ கூடயிலே அடிக்கிர மழையா
நீ என்ன நெனைச்சயே
ஈரத்திலே அணைக்கிர சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை