எவராயினும், எதைப்பற்றியாயினும் எழுதுவது நல்லது. எழுத்தே தன்னளவில் உயர்ந்த விஷயம்தான். தமிழ்ச்சமூகத்தில் பல்லாயிரத்தில் ஒருவரே ஏதேனும் வாசிக்கிறர். அதில் ஆயிரத்தில் ஒருவரே எழுதுகிறார். ஆகவே எழுத்தைப்பற்றி தாழ்வுணர்வு கொள்ளவேண்டியதில்லை. அதை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவும் வேண்டியதில்லை
எழுத்தை வணிக நோக்குடன் கையாளாமல் இருந்தால், கூடுமானவரை ஆத்மார்த்தமாக அதை எழுதினால் மட்டும்போதும். நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் உண்மையாக பதிவுசெய்திருந்தால் அது நாமேதான். எழுதுவதனூடாக நாம் வளர்கிறோம். நாம் ஒருங்கிணைவுகொள்கிறோம். வாழ்க்கையின் பல தருணங்களில் உருவாகும் அலைக்கழிவுக்கும் வெறுமைக்கும் எழுத்துபோல சிறந்த மருந்து பிறிதில்லை
தொடர்ந்து படித்து நாமிருக்கும் இடத்தை மதிப்பிட்டுக்கொண்டும், தொடர்ந்து முன்னகர்ந்துகொண்டும் இருந்தால் நாம் எழுதுவதற்கும் மானுட சிந்தனையில் ஓர் இடம் உருவாகும். நம் பங்களிப்பென்று ஒரு துளியேனும் இருக்கும்
No comments:
Post a Comment