டீக்குடிப்பது என்ற சொல் வெறும் வார்த்தையில்லை, அது ஒரு அனுபவம், வெறும் அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், கூட்டு அனுபவம், யாருடன், எப்போது, எங்கே வைத்து தேநீர் குடித்தேன் என்பது பெரும்பாலும் பசுமையாக நினைவில் இருக்கிறது,
ஒரு டீக்கடையில் தேநீர் குடித்துவிட்டு அடுத்த கடைக்குப் போய் அங்கே ஒரு தேநீர் குடிப்பது என்று அலைந்து கொண்டிருப்பது வாலிப வயதின் விளைவு , அதை நிச்சயம் ஒரு மத்திய வயதுள்ள மனிதனால் செய்ய முடியாது, அல்லது செய்ய விருப்பமிருக்காது,
தேநீர் ஒன்று தான், ஆனால் ஒவ்வொரு வயதிலும் ஒரு காரணம் கருதி அதைக் குடிக்கிறோம், முதியவர்களில் சிலர் சூட்டிற்காக மட்டுமே தேநீர் குடிக்கிறார்கள், சுவை அவர்களுக்கு முக்கியமில்லை, சென்னையில் உள்ள அடித்தட்டு மக்கள் அதிகாலையில் பிஸ்கட் இல்லாமல் தேநீர் குடிப்பதில்லை, பொறை டீ, பிஸ்கட் டீ, போன்விடா டீ என்று பல்வேறு ரகங்களிருக்கின்றன.
எனது கல்லூரி நாட்களில் காலை ஆறரை மணிக்குத் தேநீர் குடிக்க டீக்கடைக்குப் போனால் நான் திரும்பி வருவதற்கு எட்டரை மணிக்கு மேலாகிவிடும், அதற்குள் எப்படியும் மூன்று டீ குடித்திருப்பேன், வேலையில்லாத நாட்களில் தேநீர் கடைகள் தான் எங்களின் புகலிடம், டீக்கடையில் கணக்கு வைத்துக் கொண்டு குடிப்பதால் எத்தனை டீக்குடித்தோம் என்ற எண்ணிக்கையே தெரியாது, சில வேளைகளில் இரவு கடை மூடும்வரை உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டுதானிருப்போம்,
எதிர்காலம் குறித்த கற்பனை அல்லது பயம், சினிமா, பெண்கள், அரசியல், இலக்கியம், உள்ளுர் வம்புதும்புகள் என நீளும் பேச்சின் ஊடே தேநீர் தான் பேசும் பொருளை மாற்ற வைக்கும், வாக்குவாதத்தை உற்சாகப்படுத்தும்.
சாதாரணமாக ஒருவருக்கு ஒரு தேநீரை குடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும், என்னைப்போன்ற சூடுவிரும்பிகளுக்கு இரண்டு நிமிசம் போதும், ஆனால் எனது நண்பர்களில் ஒருவன் ஒரு தேநீரை குடித்துமுடிக்க குறைந்த பட்சம் முக்கால் மணி நேரமாகும், அவன் தேன் சாப்பிடுவதைப் போல துளித்துளியாகத் தேநீரைக் குடிப்பான், இவனைப்போலவே பசியை மறக்க தேநீர் குடிக்கும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் சிகரெட் மற்றும் டீயின் வழியே தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஸ்நேகம் துவங்குவதற்கு ஒரு கோப்பை தேநீர் போதுமானது, அப்படி துவங்கிய நட்பு தானே நீட்சி அடைந்துவிடுகிறது.
தேநீரோடு தான் கல்லூரி வயதின் அத்தனை நினைவுகளும் கரைந்து போயிருக்கின்றன, டீக்கடையில் நிற்கிறவர்கள் என்று ஒரு தனிப்பிரிவினர் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள், அவர்களின் உலகம் தேநீர்கடைகள் தான், நிற்பவர்களில் சிலர் காணாமல் போகும்போது புதிய சிலர் அதில் ஒன்று கலந்துவிடுகிறார்கள்,
டீமாஸ்டர்களில் அரிதாகவே பொறுமைசாலிகளைக் காணமுடிகிறது, பெரும்பான்மை மாஸ்டர்கள் எரிச்சலும் கோபமும் கொண்டவர்கள், அவர்கள் தேநீர் கோப்பையை கையாளும் விதத்தை வைத்தே கோபத்தை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் ஞானிகளை போல நிதானமும் சாந்தமும் கொண்ட சிலர் டீ மாஸ்டர்களாக ஆகிறார்கள், அவர்கள் முகத்தில் ஒவ்வொரு டீப்போடும் போது ஒரு ஆனந்தம் தோன்றுவதைக் கண்டிருக்கிறேன், புதியதாக வரைந்த ஒவியத்தை எட்டி நின்று பார்ப்பதைப் போல கண்ணாடி டம்ளரில் டீயை நிரப்பி அதன் மீது பாலின் வெண்மையான நுரையைக் கொண்டு மேகம் போல ஒவியம் தீட்டும் டீ மாஸ்டரின் ரசனைக்காக எத்தனை டீ வேண்டுமானலும் குடிக்கலாம்,
இவ்வளவு நிதானமாக, தியானம் செய்வதைப் போல டீ போடும் மாஸ்டர் ஒரு நாளைக்கு ஒரு டீக்கு மேல் குடிப்பதில்லை என்ற உண்மை பெரிய ஞானத்தை நமக்குப் புகட்டிவிடும்,
புதியதாக எங்கே ஒரு டீக்கடை திறந்திருந்திருந்தாலும் அங்கே தேநீர் குடித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும், தேடிக்குடித்து ஏமாந்துவருவேன், அது போலவே பயணத்தின் போது எங்காவது சிறுகிராமத்தில் பாய்லர் அடுப்புடன் உள்ள தேநீர்கடைகளை கண்டால் நிச்சயம் நின்று தேநீர் அருந்துவேன், அந்தத் தேநீரின் சுவை அலாதியானது,
சாப்பாடு, குடிதண்ணீரை விட தேநீரை நேசிக்கிறவன் நான், இப்போது கிரீன்டீ குடிக்கப் பழகிவிட்டேன், ஆனாலும் நண்பர்கள் சந்திப்பு, பயணத்தின் ஊடே என நாள் ஒன்றுக்கு எப்படியும் மூன்றோ நான்கோ கோப்பைகள் தேநீர் குடித்துவிடுகிறேன்
எனக்கு தெரிந்த டீ மாஸ்டர் சொல்வார்
ஒரு ஊரில் அதிக டீக்கடைகள் இருக்கிறது என்றால் அங்கே தரமான டீ இன்னமும் கிடைக்கவில்லை என்று அர்த்தம்,
அது நிஜம், ஒரு நல்ல டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருக்கிறது, அதற்காக தேடி அலைவோம், வெகு அரிதாகவே அப்படி ஒரு தேநீர் நமக்கு வாய்கிறது, மற்றபடி பெரும்பான்மைக் கடைகளில் செங்கல் கலரில் சுடுதண்ணீர் தான் டீ என்ற பெயரில் தரப்படுகிறது
வீட்டு டீ ஒரு போதும் கடை டீ ஆகிவிடாது என்பது பொதுமொழி, வீட்டில் தயாரிக்கபடும் போது டீயின் ருசி ஏனோ மட்டுபட்டுவிடுகிறது, அது போலவே தான் ஸ்டார் ஹோட்டல்களில் தரப்படும் டீயும், அது பாயசத்தின் தம்பியைப் போலவே இருக்கிறது, இதில் மசாலா டீ என்று ஒரு ரகம், அது தேயிலை கலக்கபட்ட பாயசமே தான், மறந்தும் நட்சத்திர உணவகங்களில் டீ குடித்துவிடக்கூடாது,
கேரளாவில் கிடைக்கும் கட்டன்சாயாவின் ருசி தனியானது, அதுவும் மலைக்கிராமங்களில் கிடைக்கும் கறுப்புசாயாவிற்கு தான் எத்தனை அரிதான மணம், சுவை, மலைவாழ் மனிதர்கள் தான் தேநீரின் உண்மையான சுவையை அறிந்தவர்கள், வடஇந்திய ரயில்களில் மண்குவளைகளில் தரப்படும் தேநீர் அலாதியானது, அப்படியொரு தேநீரை ரயிலில் மட்டுமே குடிக்க முடிகிறது, பெரும்பான்மை ரயில்வே பிளாட்பார தேநீர்கடைகள் மோசமானவையே,
No comments:
Post a Comment