புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,
உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல், அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது, புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது, பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆறுதல்படுத்துகின்றன.
No comments:
Post a Comment