சிறப்புக் கட்டுரை: திருமணம் என்னும் கற்பிதம்!
ஆஸிஃபா
எந்தக் கேள்வியையும் யாரை நோக்கியும் வீசாதிருப்பது சாலச் சிறந்தது. கேட்பவர்களின் சாதாரணக் கேள்விகள், கேட்கப்படுகிறவர்களின் வலிமையை, நம்பிக்கையை, ஏன் வாழ்வையே கூட உடைக்க வல்லவை.
- அஸி
இதை அண்மையில் ஒரு நாள் மாலை 5 அல்லது 6 மணிவாக்கில் என் முகநூலில் பதிவிட்டேன். ஆற்றாமையின் வெளிப்பாடாக எழுதிய சிறிய குறிப்பொன்றின் இறுதி வரிகள் இவை. இதைப் பார்த்ததும், நட்பு வட்டத்தில் சிலர் “என்னாச்சு மா?” என்ற பரிதாபக் கேள்வியைக் கேட்டார்கள். கேள்விகள் கேட்பவர்களுக்குp பதில் சொல்ல வேண்டும் என்பது வழக்கம், கட்டாயம் இல்லையே! அதனால் யாருக்கும் சொல்லவில்லை.
“எப்போ கல்யாணம்?”
தினமும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கிறோம். கடந்துவருகிறோம். நாம் ஒரு கேள்வி கேட்பது எந்த அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்றேனும் யோசித்திருக்கிறோமா? அதுவும் ஒரு பெண்ணை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளில் மிக மிக முக்கியமான ஒன்று “எப்போ கல்யாணம்?” இது சாதாரணமான கேள்வியாகப் பலருக்கும் தோன்றலாம். ஏனென்றால், நாம் பல பேரிடம் இதைக் கேட்டிருப்போம். நம்மிடமும் பலர் இதைக் கேட்டிருப்பார்கள். ஆண்கள் என்றால், முப்பது வயதை நெருங்கும் சமயத்தில், பெண்கள் என்றால் “பெரிய மனுஷி” ஆனதிலிருந்தே!
இந்தக் கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானதோ, அதே அளவிற்கு அந்தரங்கமானது. திருமணம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட விஷயம். அவர் காதலித்துக்கொண்டு இருக்கலாம். காதல் தோல்வியில் இருக்கலாம். பல கனவுகளுடன் இருக்கலாம். இல்லை திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். இதை ஏன் நாம் கேட்கிறோம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா? சொந்தங்கள் என்றால் ‘அக்கறை’ என்று பெயர் சூட்டுவோம்.
“எப்போ கல்யாணம்?” என்ற கேள்வி முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக என்னைத் துரத்துகிறது. ஒரு பெண்ணை இளங்கலை படிக்கவைப்பதே பெரிய தியாகமாகப் பார்க்கப்படுகிறது. வாழ்வின் இறுதி முடிவாகத் திருமணம் இருக்கிறது. குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணை என்ன படிக்க வைக்கலாம் என்று யோசனை நடந்தது. அப்போது முதலில் எழுந்த கரிசனம் என்ன தெரியுமா? “இன்ஜினீயரிங் படிச்சா நல்ல மாப்ள கிடைக்கும்.”
அவ்வளவுதானா? நானும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால், ஒரு பெண்ணை வளர்ப்பது, படிக்கவைப்பது எல்லாமே திருமணத்திற்காகத்தான். இந்நபர் இலக்கியம், புத்தகம், கட்டுரை என்று வாசிக்காத சாதாரண இந்தியக் குடிமகன். வீட்டில் ஒரு நூலகம் வைத்திருக்கும், பல அரிய புத்தகங்களை, பெண்ணியம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி படிக்கும் ஒருவர் இக்கேள்வியை என்னிடம் கேட்டார். நான், “எனக்கு சில கனவுகள் இருக்கு, கொஞ்ச வருஷம் கழிச்சுப் பாத்துக்கலாம், நேரம் வரும்போது எல்லாம் நடக்கும்” என்று நிதானமாகச் சொன்னேன். அதன் பிறகு நடந்த இரண்டு மணிநேர உரையின் சுருக்கம், “மனிதனின் லட்சியம் டி.என்.ஏ.வைக் கடத்துவது. நீ 30 வயசுல கல்யாணம் பண்ணா அது கஷ்டம்.” அதோடு நிற்கவில்லை. “உடனே மாப்ள பாருங்க” என்று அம்மாவிடம் அறிவுரை வேறு.
என்னை, என் விருப்பு வெறுப்புகளை என் வீட்டில் மதிப்பதால் நான் தப்பித்தேன். அப்படிப்பட்ட குடும்பம் அமையாத ஒரு பெண் முடக்கப்படுகிறாள். இதை அறியாமை என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு நன்றாகத் தெரியும் இது தவறு என்பது. இதன் பெயர் என்ன? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
பிற தகுதிகள் முக்கியமில்லையா?
ஒரு நேர்காணலில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டேன். மற்றவர்களை விட அதிக மதிப்பெண், நல்ல சரளமான ஆங்கிலம் என்று புகழ்ந்தார்கள். என் Resume கொடுத்தேன். நான்கு பக்கங்களில் என்னைப் பற்றிய முழு விவரம், நான் எழுதிய சில கட்டுரைகளின் இணைப்புகள், நான் பங்கெடுத்துக்கொண்ட செமினார் என்று நேர்த்தியான resume அது. அதை வாங்கிவிட்டு அவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். “எப்போ கல்யாணம்?”
என்னடா வாழ்க்கை என்று ஆகிவிட்டது. ஒரு பெண்ணாக இருப்பதால் மட்டும் இக்கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான நியாயமான காரணமாக அனைவரும் என்னிடம் சொன்னது, “வேலையைப் பாதியில் விட்டுவிடக் கூடாது இல்லையா? அவ்வளவுதான்.”
இதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டியவை: ஒன்று, ஒரு பெண் திருமணமானால் வேலையை விட்டுவிடுவாள் / விட்டுவிட வேண்டும் என்னும் அனுமானம்; இரண்டு, 20களில் இருக்கும் பெண் நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
எங்கு, எப்போது இப்படியான கற்பிதங்கள் தொடங்கின? திருமணம் என்பது தனி மனித விருப்பம் சார்ந்தது; காதலும் அன்பும் வாழ்தலுக்கான அடிப்படை; வாழ்வில் ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தாண்டி, திருமணம் ஒரு தவிர்க்க முடியாத கட்டாயமான விஷயமாக ஏன் மாறிவிட்டது? திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண்ணால் வாழ முடியாது என்று ஏன் சொல்லித் தருகிறார்கள்?
பார்வை விசாலமடையுமா?
இப்படிப் பல கேள்விகள். ஆனால், விடைகள் எங்கேயும் கிடையாது. 20 வயதுகளிலும் காதல் வராத நபர்கள் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, சுயமரியாதையை இழக்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் யாரையோ திருமணம் செய்து அவரின் வாழ்க்கையையும், வெற்றிகரமாகக் கடத்தப்பட்ட டி.என்.ஏ.வின் வாழ்க்கையையும் நாசமாக்குகிறார்கள். இவ்விஷயத்தில் யாரையும் குற்றம்சாட்ட முடியாது. இவை எல்லாம் அனைவரின் நாடி நரம்பிலும் ஊறிப் போன விஷயம். ஆனால், சற்று நம் பார்வையை விசாலமாக்கலாம்; வெளியை விரிவுபடுத்த முயற்சிக்கலாம்.
“இதை எல்லாம் காதுல வாங்கிக்காதே” என்று எல்லோரும் சொல்கிறார்கள். எத்தனை நாட்களுக்கு எத்தனை பேர்தான் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடந்து செல்வது? இது நம் சமூகத்தில் பேசப் பட வேண்டிய முக்கியமான விஷயமாக ஏன் யாருக்கும் தெரியவில்லை? காதலும் திருமணமும் விருப்பத்தின் பெயரால் நடப்பவை. அதைக் கட்டாயமாக்காதீர்கள்.
ஒரு பெண்ணுக்குக் கனவு காண உரிமை இருக்கிறது; ஒரு பெண்ணுக்குத் தன் வாழ்வை முடிவு செய்யும் உரிமை இருக்கிறது; ஒரு பெண்ணுக்குத் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முழுச் சுதந்திரமும் இருக்கிறது. பெண்கள் இறக்கையை விரித்துப் பறப்பதற்கான வானமாக நீங்கள் இல்லாமல் போனாலும் பரவாயில்லை, அவர்களை அடைத்து வைக்கும் கூண்டாக இருக்காதீர்கள்.
No comments:
Post a Comment