மனுஷ்யபுத்திரன் கவிதை
பொம்மை அரசனின் படைகளுக்கு
வீரம் இப்போது அதிகரித்துவிட்டது
கடமை இப்போது அதிகரித்துவிட்டது
அவர்கள் இப்போது
சோளக்காட்டுக் காவல் பொம்மைகளையும்
கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்
எனது ஒரு துண்டு நிலத்தை
தர மாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை
இருபது காவலர்கள்
புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள்
இன்று காணக் கிடைக்கின்றன
எங்கள் காற்றை நஞ்சாக்காதே
என்று சொன்ன
ஒரு சிறுவனின் முதுகை
சில நாட்களுக்கு முன்னர்தான்
அவர்கள் உரித்திருந்தார்கள்.
அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது
அச்சம் அவர்களை நிதானமிழக்க வைக்கிறது
மக்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்
சிறார்களை, மூதாட்டிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள்
சிறு புல்லைக் கண்டு அஞ்சுகிறார்கள்
'போராட்டம்' என்ற சொல்லைக் கண்டு அஞ்சுகிறார்கள்
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
அச்சத்தை அச்சத்தால் வெல்ல வேண்டும்
அவர்கள் அச்சுறுத்த விரும்புகிறார்கள்
காற்றைத் தடியால் அடிக்கிறார்கள்
நிலத்தைத் துப்பாக்கியால் சுடுகிறார்கள்
ஆக்ரமிக்கப்படும் நிலத்தின் மேல்
ஒரு நாய் குறுக்கே செல்கிறது
அதைச் சுடுகிறார்கள்
பறிக்கப்படும் வயலின் மேல்
ஒரு பறவையின் நிழல் விழுகிறது
அதைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள்
மக்கள் அஞ்சவில்லை
அஞ்சுகிற பொம்மை அரசனின் கோழைத்தனம் கண்டு சிரிக்கிறார்கள்
தன் சொந்த மக்களைச் சுடும் பேடித்தனம் பற்றி
கூடிப் பேசுகிறார்கள்.
எளிய மக்களின் நியாயம் எளிமையானது
ஆக்கிரமிப்பவர்களைக் காண்பது அவர்களுக்குப் புதிதல்ல
அபகரிப்பவர்களைக் காண்பது அவர்களுக்குப் புதிதல்ல
அவர்களோடு சண்டையிடுவது
அவர்களுக்குப் புதிதல்ல
வரலாற்றில் எல்லாம்
திரும்பத் திரும்ப இப்படித்தான் நடக்கின்றன
நள்ளிரவுக் கைதுகள்
அதிகாலைக் கைதுகள்
நிராயுதபாணிகளைக் கொல்லும் படைகள்
நிராயுதபாணிகளை இழுத்துச்செல்லும் படைகள்
வயதான மூதாட்டியை
இருபது காவலர்கள்
புடைசூழ அழைத்துச்செல்லும் காட்சி
மிகவும் வினோதமானது
அவள் ஒரு பயங்கரவாதி
அவள் ஒரு தீவிரவாதி
அவள் ஒரு நக்சலைட்
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்
அவளது ஒரு பிடி நிலம்
பொம்மை அரசனின்
பொம்மைப் படைகள்
வயல்வெளிகளில்
பயிர்களுக்குத் தீ வைக்கின்றன
பாறைகளுக்கு வெடி வைக்கின்றன
பறவைகள் சிதறிப் பறக்கின்றன
மக்கள் அப்படிச் சிதற மாட்டார்கள்
பெரிய கலகம் வரப்போகிறது
19.6.2018
பிற்பகல் 2.12
மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment