மற்றவர்களை ஏன் பார்க்க வேண்டும்?
எப்போதுமே ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் அளவுக்கு அவருக்கு விளைநிலங்கள் இருந்தன.
அன்றைக்குத் தோட்டத்தில் அறுப்பு வேலைக்கு ஆட்களைக் கூட்டி வருமாறு தன்னுடைய வேலைக்காரனை அனுப்பினார் அந்த நிலக்கிழார். அப்போது, ஊருக்குள்ளே சென்ற வேலைக்காரன், “அறுப்பு வேலை அதிகம் இருக்கிறது. வாருங்கள், உங்களுக்கு நல்ல கூலி தரப்படும்” என மக்களை அழைத்தார்.
அதைக் கேட்டு சிலர், வந்தனர். ஆனால், பாதி வேலைகூட முடியவில்லை. மறுபடியும் ஊருக்குள் சென்று மேலும் ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், வேலை முடிகிற மாதிரி தெரியவில்லை. அதனால், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஊருக்குள் சென்று மேலும் ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு வழியாக வேலை முடிந்தது.
அனைவருக்கும் கூலி வழங்கப்பட்டது. காலையிலேயே வேலைக்கு வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏனெனில், தாங்கள் சீக்கிரம் வேலைக்கு வந்ததால், அதிகமான கூலி கிடைக்கும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அனைவருக்கும் ஒரே கூலியே கொடுக்கப்பட்டது.
“நாங்கள் காலையிலிருந்து வெயிலில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். இவர்களோ இப்போதான் வந்தார்கள். எங்களுக்கு அதிகமான கூலியும், அவர்களுக்குக் குறைவான கூலியும் தருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைவருக்கும் ஒரே கூலியைத் தந்துள்ளீர்கள்” எனக் கேட்டனர்.
அதற்கு, “உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை குறைக்கவில்லையே. நான் இரக்கமுள்ளவனாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை” என நில உரிமையாளர் பதிலளித்தார்.
இது பைபிளில் இடம்பெற்றுள்ள கதை.
நம்முடைய வேலைக்குச் சரியான கூலி கிடைக்கிறதா என்பதைப் பார்க்காமல், மற்றவர்களைப் பார்த்துத் தன்னுடைய மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ளும் மக்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களால் தங்கள் பணியிலும் திருப்தி அடைய முடியாது. கிடைக்கும் பணத்தைக் குறித்தும் திருப்தி அடைய முடியாது.
அடுத்தவரைப் பார்க்காமல் நமக்கான வேலை, அதற்குரிய பலன் என்று ஒவ்வொரு விஷயத்தையும் அணுகினால் மகிழ்ச்சி எப்போதும் உங்கள் அருகில் நிற்கும். மற்றவர்களைப் பொறுத்துதான் நமது திருப்தி என்றால் அந்தத் திருப்தி ஒருபோதும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே, நமது திருப்தி ஒருநாளும் நிறைவுறாது.
- வினிதா
No comments:
Post a Comment