ஓர் ஊரில் ஒரு கழைக்கூத்தாடி. அவனால் எவ்வளவு சிறிய வளையத்துக்குள்ளும் தனது உடலை நுழைத்து வெளியே வர முடியும். ஒருமுறை மிகச்சிறு வளையத்துக்குள் தன்னுடலை நுழைத்த கழைக்கூத்தாடியின் திறமையைக் கண்டு வியந்துபோனான் ஒரு திருடன். இவன் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே நுழைந்து கொள்ளையடிக்கும் வீட்டின் கதவைத் திறந்துவிட்டால், நம் வேலை சுலபத்தில் முடியுமே என்று நினைத்து, அந்த கழைக்கூத்தாடியைத் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
பங்களா வீடொன்றில் இருவரும் திருடச் சென்றனர். எவ்வளவு முயன்றும், கழைக்கூத்தாடியினால் ஜன்னல் கம்பிகளுக்குள் உடலைக் குறுக்க முடியவில்லை. முயன்று அலுத்துபோன கழைக்கூத்தாடியைப் பார்த்து திருடன் கேட்டான்: “நீதானே அன்று கையளவு வளையத்துக்குள் நுழைந்து சாகசம் செய்தாய்?”
“10 பேர் சுற்றி நின்று கைதட்டினால் நான் ஜன்னலுக்குள் நுழைந்துவிடுவேன்” என்றான் கழைக்கூத்தாடி.
கைதட்டினால் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வந்துவிட மாட்டாரா என்று கோபப்பட்டான் திருடன். அதனைக் கேட்டுப் புன்னகைத்த கழைக்கூத்தாடி, “என் வேலையின் வெற்றி கைத்தட்டலில் இருக்கிறது. உங்களது வேலையின் வெற்றி நிசப்தத்தில் அடங்கியிருக்கிறது. இது எனக்குச் சரிப்பட்டு வராது” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
ஒவ்வொரு மனிதரின் இயல்பும் வேறுபட்டது. எல்லோருக்கும் எல்லாமும் சரிப்பட்டு வருவதில்லை. இதை உணராமல், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால், கம்பிகளுக்கு இடையில் மாட்டிக்கொள்வோம்!
No comments:
Post a Comment