நீங்கள்தான் நீதிபதியா?
ஒருமுறை இயேசு ஆலய வாசலில் உட்கார்ந்து மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிலர், ஒரு பெண்ணை இழுத்து வந்து இயேசுவின் காலடியில் போட்டனர். “இயேசுவே, இந்தப் பெண் விபச்சாரம் செய்தாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று கூறினார்கள். “இதை நாங்கள் கூறவில்லை. இது மோசேயின் கட்டளை” என்றும் ஆவேசமாகச் சொன்னார்கள்.
இயேசு பதில் எதுவும் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அதற்குள் அங்கே பெரும் கும்பல் கூடிவிட்டது. இயேசு என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்தனர்.
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் இயேசு, “உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்” எனக் கூறினார்.
இதைக் கேட்டதும், அங்கிருந்தவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஒவ்வொரு நாளும் நமக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் தம்முடைய தவறுகள் குறித்துச் சிந்திக்கிறோம், எவ்வளவு நேரத்தை மற்றவர்கள் குற்றத்தைப் பற்றி யோசிக்கவும் பேசவும் ஒதுக்குகிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
தவறே செய்யாதவர் இந்த உலகில் இல்லை. நாமெல்லாருமே ஏதோ ஒரு சூழலில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்து விடுகிறோம். இவையனைத்துக்கும் நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமானால், அதற்குக் காலம் போதாது. அதை மறந்துவிட்டு, மற்றவர்களின் குற்றத்தை மதிப்பிட்டுத் தீர்ப்பு வழங்கி விடுகிறோம். தண்டனையையும் உடனே வழங்க விரும்புகிறோம். நாமும் ஒரு விதத்தில் தண்டனைக்குரியவர்கள்தாம் என்பதை மறந்து விடுகிறோம்.
அந்தப் பெண்ணைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரியவர்கள் இயேசுவின் சொல்லைக் கேட்டதும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். பிறரைக் குற்றம்சாட்டும் எத்தனை பேருக்கு இந்தப் பக்குவம் இருக்கும்?
குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக ஒருமுறை அரவணைத்துப் பார்ப்போமே. அவர்களும் நம்மைப் போலத்தானே? நமது தவறுகளை எவ்வளவு மென்மையாக, அனுசரணையோடு நாம் அணுகுகிறோம்! அந்த அனுசரணையோடு பிறரையும் அரவணைக்கலாமே.
அந்த அரவணைப்பே அவர்களை மாற்றலாம். அது நம்மையும் மாற்றலாம்!
- சா.வினிதா
No comments:
Post a Comment