அந்த ஓர் ஆடு!
ஒருவரிடம் 100 ஆடுகள் இருந்தன. தினமும் அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, திரும்பக் கொண்டுவந்து மந்தையில் அடைப்பது அவர் வேலை.
ஒருநாள் ஆடுகளை மேய்ச்சலிலிருந்து வீடு திருப்புவதற்காக அந்த மேய்ப்பன் வழக்கம்போல ஆடுகளை எண்ணத் தொடங்கினார். அப்போது ஓர் ஆடு தொலைந்துபோனது தெரியவருகிறது.
அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். பெரும் கவலை அவரைப் பற்றிக்கொண்டது. 99 ஆடுகளைப் பத்திரமாக ஓரிடத்தில் தங்கவைத்துவிட்டுக் கிளம்புகிறார். காடு மேடுகளில் அலைந்து திரிந்து ஆட்டைத் தேடுகிறார்.
பல இடங்களிலும் தேடித் திரிந்த பிறகு கடைசியாக ஒரு பாறையின் உச்சியில் கீழே இறங்க வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த அந்த ஆட்டைப் பார்க்கிறார். அதைக் கண்டதும் அவருக்கு எல்லையில்லாத சந்தோஷம். ஆட்டைத் தூக்கித் தன்னுடைய தோளில் வைத்துக்கொண்டு பாட்டு பாடிக் கொண்டே திரும்புகிறார்.
நல்லவேளை, 99 ஆடுகள் வந்துவிட்டன என்று அவர் நினைக்கவில்லை. அந்த ஓர் ஆடு எங்கே என்ற கவலைதான் அவருக்கு. அந்த ஆட்டைக் கண்டுபிடித்த பிறகுதான் அவருக்கு நிம்மதி. அதுவரை பசி, தாகம் எதுவும் பாராமல் தேடி அலைகிறார்.
வந்து சேர்ந்த 99 ஆடுகள் முக்கியம்தான். ஆனால், வழி தவறிய ஒரே ஓர் ஆடு அதைவிட முக்கியம்.
தன் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் பற்றிக் கவலைப்படுபவரே நல்ல மேய்ப்பன் என்கிறது பைபிள்.
நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு, கடமைகள், பணிகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதில் இந்த மேய்ப்பன் போன்று நீங்கள் செயல்படுகிறீர்களா?
செய்து முடித்த பல்வேறு பொறுப்புகளைக் காட்டிலும் முடிக்கப்படாததாக ஒரே ஒரு பொறுப்பு இருந்தாலும் அதுவும் மிக முக்கியம் என நினைக்கிறீர்களா?
ஆம் என்றால், நீங்களும் நல்ல மேய்ப்பர்தான்.
- வினிதா
No comments:
Post a Comment