எப்போதும்,
‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
போகாதே’ என்று சொல்லும்
நேயமுகில்
அன்று ஒரு கோபத்தில்
‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
என்றுவிட்டாள்.
‘சரி, நான் போறேன்’ என்று
திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
சமாதானம் செய்ய வந்தாள்.
நான் வாங்கிக்கொள்ளவில்லை.
திடீர் உற்சாகத்துடன்
‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
அட, ஆமாம்.
‘எனக்கும் லீவு’ என்றாள்.
‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
அது அவளுடைய கரடி பொம்மை.
தன் பொம்மைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக அழைத்து
விடுமுறை அறிவித்தாள்.
சமைக்க வைத்திருந்த காய்கள்,
தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
தண்ணீர் பாட்டில்,என்று
தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
விடுமுறையைக் கொடுத்தாள்.
ஒவ்வொரு அறையாக நுழைந்து
தன் பொற்பிரம்பால் தொட்டு
பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
தன் பெருமூச்சை
ஒரு குமிழியாய் வெளியிட்டு
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.
-முகுந்த் நாகராஜன்
No comments:
Post a Comment