'தும்பி'
குழந்தைமை நோக்கி அதன் உணர்தலுக்காக
அந்த உலகின் வழித்தடமாக...
மண்வீடு கட்டி நான்கு பக்கமும் வாசல் தோண்டி நண்பனின் கை குலுக்கம் அற்புதத்தை எங்கனம் செய்வது? மண்ணை தொட்டால் அலர்ஜி வருமே. பாசிபடிந்த பாறை இடுக்கு ஊற்றுநீர் கிருமிகள் உடையதென்றால் நம் பிள்ளைகள் குடிக்கும் வேதியல் நஞ்சை இறக்கும் நெகிழி குப்பி நீர் பாதுகாப்பானதுதான்.
நெளிந்து குறுகி யானையின் துதிக்கையில் காசு திணிக்கும் தவிப்பை அனுபவிக்க மனமற்ற குழந்தைகள் ஆங்கிரி பர்ட் கேமில் லயித்து கிடக்கிறார்கள். நுங்கு வண்டி செய்யத் தெரியாமல் நம் பிள்ளைகள் கார் ரேஸ் விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தூண்டில் போடும் அனுபவமும், களிமண்ணில் பொம்மை செய்யும் நேர்த்தியும், மூச்சடக்கி பழகும் முங்கு நீச்சலும் குளங்களற்ற நகரத்து குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும்.
அவர்கள் கைகளில் முளைத்து கிடக்கும் திறன்பேசிகளுக்கு ஓய்வு கொடுங்கள். தாயை பிரிந்து தவிக்கும் அணில்பிள்ளையும், கூட்டிலிருந்து தரை விழுந்து கிடக்கும் மைனா குஞ்சுகளும், ஆடி அசைந்து காற்றில் பறந்து வரும் தாத்தா பூவும், நம் குழந்தைகளின் உள்ளங்கை அடைகாத்தலுக்காக காத்துக்கிடகின்றன. மலைகள், விண்மீன்கள், நிலா, பொன்வண்டு, பொம்மைகள், கதைகள், பிரம்மாண்டங்கள், வண்ணங்கள் நிறைந்த உலகம் அவர்களுடையது. வெறும் மதிப்பெண்களும்,கைபேசிகளும், இணையதளமும் மட்டும் அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது.
தந்தையை இழந்து பள்ளி வரும் நண்பனிடம் பரீட்சை மதிப்பெண்களை விசாரிக்கும் மனதை வளர்த்திருக்கிறது இன்றைய அவசர கல்வி.
பள்ளிக்கூடம் தயாரித்து அனுப்பும் மதிப்பெண் எந்திரங்களாக நம் பிள்ளைகள் வளர்ந்து வருகின்றனர். வீட்டில் வளர்க்கும் கிளியை பற்றியோ நாய்குட்டியை பற்றியோ அவர்களுடன் பேசுவதற்கு ஆளில்லை. வீடு சிறைச்சாலையாகவும், பள்ளி தொழிற்சாலையாகவும் மாறி குழந்தைகளின் உலகம் இருட்டில் மூழ்கி மிதக்கிறது.
கக்கத்து கதகதப்பில் கிடத்தி கதைகளின் வழி அன்பை, அறத்தை, பச்சையத்தை கடத்தும் பாட்டிகளை தொலைத்து நிற்கும் பிள்ளைகள், மனப்பாடம் செய்வதை தவிர வேறெதுவும் தெரியாத மந்தையாக வளர்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பணம் சம்பாதிப்பதை தவிர வேறெதற்காகவும் இல்லை.
பெற்றோராகிய நம் அறியாமையும் ஆதரவும் அனுமதியும்தான் நம் பிள்ளைகளை இந்நிலைக்கு இட்டு வந்து இருக்கிறது.
வாசிப்பின் வழி, காட்சியின் வழி, கதையின் வழி அன்பையும் அறத்தையும் விதைக்கும் ஒரு பாட்டியை நம் குழந்தைகளின் தலைமாட்டில் கிடத்தவும், சக உயிர்கள் மீதான நேசத்தை வளர்க்கவும், பட்டாம்ப்பூச்சியின் சிறகை உள்ளங்கையில் வைத்து பொத்திக் கொள்ளவும், கைபேசிகளை அழுத்தும் விரல்கள் தும்பியை பிடிக்கவும், குழந்தைகள் குழந்தைகளாக இருக்கவும் ஒரு சிறு முயற்சியாக 'தும்பி' என்ற பெயரில் இதழ் ஒன்றை துவங்குகிறோம்.
No comments:
Post a Comment