ஒரு கதை...
கடற்கரை ஓரமாகப் பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. கடற்கரை ஓரம் மரம் வளருமா என்றெல்லாம் கேட்காமல் கதையைக் கேளுங்கள்.
அந்த மரத்தின் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் இரண்டு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன.
ஒரு நாள் புயல் காற்றினாலும் பெரிய அலைகளினாலும் கிளையில் இருந்த கூடு நழுவிக் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்துக்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
ஆண் குருவி, ‘ நமது கூடு கரையின் ஓரமாகத்தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்தக் கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்’ என்று பெண் குருவிக்குத் தன்னம்பிக்கை ஊட்டியது .
இரண்டு குருவிகளும் தங்கள் வாயில் கொள்ளும் அளவுக்குத் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் உமிழ்ந்தன. திரும்பவும் தண்ணீரை வாயில் எடுத்துக்கொண்டன. கொண்டுபோய் தொலைவில் உமிழ்ந்தன. இப்படியே இரவு பகல் என நாள் முழுவதும் இடைவிடாமல் செய்துகொண்டிருந்தன. இப்படிச் செய்தால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும், தங்கள் முட்டைகள் வெளிப்படும் என்பது அவற்றின் எண்ணம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். குருவிகளின் செய்கை அவருக்கு வியப்பாக இருந்தது. அவர் கண்களை மூடினார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த குருவிகளின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அவற்றின் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளைப் பற்றிக்கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா, அல்லது முனிவரின் அருளாலா?
இரண்டினாலும்தான். தண்ணீர் வற்றியது முனிவரின் தவசக்தியால் என்றாலும், குருவிகள் கடல் நீரை வாயில் கொண்டு சென்று வேறோர் இடத்தில் ஊற்றிக்கொண்டிருக்காவிட்டால் முனிவருக்குக் குருவிகளின் தவிப்பும் முயற்சியும் தெரியாமலே போயிருக்கும். குருவிகளின் முயற்சியும் உழைப்பும் தெரிந்ததால்தான் முனிவரால் உதவ முடிந்தது.
எனவே, நம் முயற்சியில் வெற்றி பெறுவது என்பது நம் உழைப்பில் மட்டும் இல்லை, எத்தனையோ காரணிகள் உள்ளன. அவை அனைத்தும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் நாம் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உழைப்பு, முயற்சி இரண்டும் வெற்றி பெறும்.
நாம் எடுக்கிற முயற்சி நேர்மையானதாக இருந்தால் அதற்குத் துணைபுரியும் சக்திகள் தானாகவே நம் முயற்சிக்குப் பக்கத் துணையாக வந்து சேரும்
No comments:
Post a Comment